தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகரில் தார்ச் சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
கொடைக்கானல் கீழ் மலைக் கிராமமான தாண்டிக்குடியில் கூடம் நகர் அமைந்துள்ளது. இந்த மலைக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்களின் பிரதான தொழில் விவசாயம்தான். தாண்டிக்குடியில் இருந்து 10 கி.மீ. தூாரத்தில் இக்கிராமம் உள்ளது. இக்கிராமத்துக்குச் செல்ல முறையான சாலை வசதி கிடையாது. கரடு முரடான பாறைகளை கடந்துதான் நடந்து செல்ல வேண்டும்.
சரியான சாலை வசதியின்றி பேருந்து வசதியும் செய்து தரப்படவில்லை. விளைபொருட்களை குதிரைகள் மூலமோ அல்லது வாடகை ஜீப்களில் ஏற்றியோ சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். சாலை வசதியும், பள்ளிக்கூடமும் இல்லாததால் இங்குள்ள மாணவர்கள் வெளியூர் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
மருத்துவ சிகிச்சைக்காக ‘டோலி’ கட்டி நோயாளிகளை தாண்டிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்கின்றனர். இதனால் சில நேரங்களில் மருத்துவமனையை அடையும் முன்பே நோயாளி உயிரிழக்கும் சோகமும் நிகழ்ந்து வருகிறது.
இக்கிராமத்தின் நிலையைக் கண்டு திருமணத்துக்கு பெண் கொடுக்கவும், எடுக்கவும் எவரும் முன்வருவதில்லை. இதனாலேயே இக்கிராமத்தில் இளைஞர்கள் பலர் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர்.
கரடுமுரடான தற்காலிகச் சாலையைச் சீரமைத்து போக்குவரத்துக்கு ஏற்ற தாரச் சாலையாக அமைத்துத் தந்தால் வசதியாக இருக்கும் என்கின்றனர் மலைக்கிராம மக்கள்.
இக்கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வி கூறுகையில், சாலை வசதிக் கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆய்வுசெய்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகின்றனரே தவிர, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
சாலை வசதியின்றி மிகவும் சிரமப்படுகிறோம். எந்த ஒரு அடிப்படை வசதிகளும் முழுமையாக எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.