சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், 'பெரியாரை வாசிப்போம்' என்ற மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. 
தமிழகம்

‘பெரியாரை வாசிப்போம்’ என்ற பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சி: மாணவர்கள் உள்பட 6 லட்சம் பேர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த, ‘பெரியாரை வாசிப்போம்’ என்ற மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்ச்சியில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 லட்சம் பேர் பங்கேற்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், ‘பெரியாரை வாசிப்போம்’ என்ற மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள் உள்ளிட்ட 2,500 பேர், மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளின் மாணவர்கள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் மாணவர்கள் உள்ளிட்ட 6 லட்சம் பேர்,

அவரவர் வகுப்பறைகளில் இருந்து காலை 10 மணி முதல் காலை 10.20 மணி வரை ஒரே நேரத்தில் பெரியார் குறித்த 3 பக்க வரலாற்று தகவல்களை ஒருமித்து வாசித்தனர்.

இந்நிகழ்ச்சியை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 609 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 4,01,378 பேர், ஆசிரியர்கள் 18,285 பேர், பெரியார் பல்கலைக் கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 1,77,313 பேர், ஆசிரியர்கள்,

பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 5,96,976 பேர் பங்கேற்று, ‘பெரியாரை வாசிப்போம்’ என்ற மாணவர் பெருந்திரள் வாசிப்பு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

மாணவர்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்தவும், இளைய சமுதாயத்தினர் இடையே அரிதாகிவிட்ட புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை மேம்படுத்தவும், பெரியாரின் கொள்கைகளை மாணவர் மனதினில் விதைக்கவும் இந்த வாசிப்பு நிகழ்வு ஓர் உந்து சக்தியாக இருக்கும். ஏறத்தாழ 6 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பெரியார் குறித்த உரையை வாசித்தது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாகும், என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா பேசுகையில், ‘பெரியாரைப் பற்றி குறிப்பிட்ட நேரத்தில் வாசிக்கும் இந்த வரலாற்று நிகழ்வு இளைய சமுதாயத்தினர் இடையே, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவும், மின்னணு ஊடகங்களில் வாசிக்கும் மாணவர்கள், புத்தகங்களை படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது’ என்றார்.

பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கதிரவன், கலைஞர் ஆய்வு மைய இயக்குநர் (பொ) சுப்பிரமணி, நூலகர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT