தமிழகம்

சுற்றுலா பயணிகளை கவர மண் பானை குப்பை தொட்டி: மதுரை மாநகராட்சி புது முயற்சி

செய்திப்பிரிவு

மதுரை சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கவும், குப்பைகளை திறந்த வெளியில் போடுவதை தவிர்க்கவும், நேற்று மாநகராட்சி சார்பில் மண்பானை குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன.

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் மதுரை மாநகராட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு தயார்படுத்தும் வகையில் மதுரை நகரை புதுப்பொலிவுப்படுத்தவும், சுற்றுலாத்தலங்களை அழகாக் கவும் மாநகராட்சி, சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல்துறை இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் நிறுவனங்கள், சமூக தன்னார்வ இயக்கங்கள் மூலம் வாரந்தோறும் மதுரை நகர வீதிகள், பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணிகள் கடந்த சில மாதமாக நடக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் ‘பிளாஸ்டிக்’கிற்கு முற்றிலும் தடை விதித்து, தடையை மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநராட்சி எச்சரித்துள்ளது. மாநகராட்சியின் மற்ற வார்டுகளிலும் பிளாஸ்டிக்கிற்கு முற்றிலும் தடை விதிக்க நட வடிக்கை எடுக்கப்படுகிறது.

அதற்காக தற்போது பஸ்நிலையம், முக்கிய சாலைகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், வியாபாரிகளிடம் மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரியே கடந்த வாரம் வீதிகளில் இறங்கி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிலையில் தென்னிந் தியாவின் முக்கிய சுற்றுலா நகரான மதுரைக்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம், திருமலை நாயக்கர் மகால், வைகை ஆறு, மீனாட்சியம்மன் கோயில், காந்தி மியூசியம், தெப்பக்குளம், புது மண்டபம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாப்பயணிகள் கவனத்தை ஈர்க்கவும், கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கவும், மண் பானை குப்பைத் தொட்டிகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

நேற்று வைகை ஆறு, மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால் பகுதிகளில் மாநகராட்சி இந்த மண்பானை குப்பைத் தொட்டிகளை வைத்து, அப்பகுதி மக்கள், வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகளிடம் அதன் நோக்கம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வைகை ஆற்று சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த மண் பானை குப்பைத்தொட்டியை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வெளியூர் வாசிகள் விநோதமாக வேடிக்கைப்பார்த்து சென்றனர்.

ஒரு மண்பானையின் விலை ரூ.30 ஆயிரம்

மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மகாராஷ்டிரா மாநில சுற்றுலாத்தலங்களில் இதுபோல் மண் பானை குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதை பார்த்து மதுரையை சுத்தமான நகராக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி ஆணையரின் ஈடுபாடு காரணமாக எடுக்கப்பட்டதே இந்த புது சுகாதாரத் திட்டம். மண்பானை குப்பைத்தொட்டி வைத்தால் குப்பைகளை கீழே போட மனசு வராமல் அந்த தொட்டிகளில் போட முன் வருவார்கள். அதற்காக, மகாராஷ்டிரா கம்பெனியில் ஆர்டர் செய்து, மதுரை மாநகராட்சிக்கு இந்த மண்பானை குப்பைத்தொட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டி ரூ.30 ஆயிரம் எனக்கூறப்படுகிறது. தற்போது பரிசோதனை முறையில் வைகை ஆறு உள்ளிட்ட சில இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கான வரவேற்பை பொறுத்து மற்ற இடங்களிலும்இந்த குப்பைத் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

SCROLL FOR NEXT