தருமபுரி: ஒகேனக்கல் துணை சுகாதார நிலையம் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு மினி ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் துணை சுகாதார நிலையம், ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (14-ம் தேதி) ஆய்வு செய்தார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் துணை சுகாதார நிலையம், ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் சேவைகள், உள் கட்டமைப்புகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அமைச்சர், 'ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் 2 மருத்துவர்களில் ஒருவர் ஓராண்டு மகப்பேறு விடுப்பில் உள்ளார். பொதுமக்களின் நலன் கருதி இங்கு வேறு ஒரு மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரிய சுற்றுலாத் தலமாக ஒகேனக்கல் இருப்பதால் இங்குள்ள துணை சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவே, இந்த துணை சுகாதார நிலையத்தில் இ- சஞ்சீவினி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் இங்கு பணியாற்றும் செவிலியர்கள் ஊட்டமலை ஆராம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்களோடு காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவச் சேவையாற்றுவர். மேலும் ஊட்டமலையில் பணியாற்றும் மருத்துவர்கள் மாற்றுப்பணி முறையில் ஒகேனக்கல் துணை சுகாதார நிலையத்தில் பணியாற்ற உள்ளனர்.
ஒகேனக்கல் துணை சுகாதார நிலையம் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு மினி ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும். ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் மண் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்க உள்ளது' என்றார்.
இந்த ஆய்வின்போது, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் சவுண்டம்மாள், முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.