ராமநாதபுரம்: தமிழக அரசு மின் கட்டண உயர்வைஉடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் வரும் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று வந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், உச்சிப்புளி பகுதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியுள்ள நிலையில், தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.
இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும். இதை வலியுறுத்தி வரும்19-ம் தேதி தமாகா சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மீனவர் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்தாதது வருத்தம் அளிக்கிறது. வெளி மாநிலத்தவர் அதிகம் வந்து செல்லும் ராமேசுவரத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துள்ளது. நாட்டில் 98 சதவீத மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ராகுல் காந்தியின் நடைபயணத்தால் நாட்டுக்கும், மக்களுக்கும் எவ்விதப் பயனும் இல்லை. திராவிட மாடல் ஆட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது.
டாஸ்மாக் கடைகளை பெருக்குவது, விற்பனை குறையாமல் கண்காணிப்பதில்தான் தமிழக அரசுதீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். ஸ்மார்ட்சிட்டி திட்டப் பணிகள், ஆக்கப்பூர்வமாக நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.