மின் கட்டண உயர்வால் திருப்பூரில் சிறு,குறு நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக திருப்பூர் பின்னலாடைத் தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.பி.முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அவர்அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பனியன் தொழில் நகரான திருப்பூரில் ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி மூலம் நடைபெற்று வருகிறது.
பணமதிப்புநீக்கம், ஜிஎஸ்டி, கரோனா தொற்று, நூல் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை என தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறோம்.
திருப்பூரில் 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை சார்ந்துள்ளது. எஞ்சிய 10 சதவீதம் மட்டுமே பெரிய நிறுவனங்களாகும். அவர்கள் சொந்தமாக சோலார் மற்றும் காற்றாலை நிறுவனங்களின் மூலம் மின் கொள்முதல் செய்து, தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
எஞ்சிய 90 சதவீதம் பேரும், தமிழக அரசின் மின்வாரியத்தை நம்பியே தொழில் செய்கின்றனர். தற்போதைய நிலையில் 70 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
எஞ்சிய 30 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. தமிழக அரசின் மின் கட்டண உயர்வால், எஞ்சிய நிறுவனங்களும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
பனியன் தொழிலை சார்ந்துள்ள நூற்பாலை, நிட்டிங், டையிங், காம்பாக்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, எலாஸ்டிக் உட்பட அனைத்து உப தொழில்களும் பாதிக்கப்படும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
திருப்பூர் பனியன் தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.