ரயில்களை பாதுகாப்பாக இயக்க உதவும் ‘பாய்ன்ட்’கள் என்ற அமைப்பு கால மாற்றத் தால் ஊழியர்கள் இயக்குவதில் இருந்து கணினிக்கு மாறி உள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில் பாதைகள் இருப்பது வழக்கம். அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து வரும்ரயிலை ஏதாவது ஒரு ரயில் பாதையில் மட்டுமே இயக்க முடியும். அதற்கு உதவி செய்வதுதான் "பாய்ன்ட்" என்கிற அமைப்பு.
ஒன்றுக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் சந்திக்கும் அல்லதுஇணையும் இடங்களில் இப்பாய்ன்ட் அமைப்புகள் இருக்கும். இதை கையாளுபவர்கள் பாய்ன்ட் மேன் என அழைக்கப்படுகின்ற னர்.
தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் எல்லா பாய்ன்ட்களையும் இவர்களே இயக்கினர். உயரமான கட்டிடப் பகுதியில் இருந்து பாய்ன்ட்களை இயக்கி கைகாட்டிகள் மூலம் ரயில் டிரைவர்களுக்கு சைகை உதவி புரிந்தனர்.
பின்னர் இந்த இயக்க முறை கைவிடப்பட்டு, பேனல் போர்டு விசைகள் மூலம் ரயில் நிலைய அதிகாரிகளே பாய்ன்ட்களை இயக்கினர். சிவப்பு, பச்சை, மஞ்சள் கலர் விளக்குகள் கைகாட்டி பயன்பாட்டுக்கு வந்தன. தற்போது இதுவும் மாறி, பெரிய கணினி திரைகளில் மவுஸ் மூலம் நிலைய அதிகாரிகள் பாய்ன்ட்களை இயக்குகின்றனர்.
இருப்பினும் பெரிய ரயில் நிலையங்களில் ரயில்களை பராமரிக்க கொண்டு செல்லவும், பராமரிப்பு முடிந்ததும் எடுத்து வரவும் மேனுவல் பாய்ன்ட்கள் பயன்பாட்டில் உள்ளன.
பாய்ன்ட்கள் பழுதாகாமல் இருக்க பாய்ன்ட் மேன்கள் தினமும் அதை துடைத்து சுத்தப்படுத்தி எளிதாக இயங்க எண்ணெய் பூசுகின்றனர். பாய்ன்ட்கள் பழுதானால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்கின்றனர். ரயில்களில் என்ஜின்களை இணைப்பது, விடுவிப்பது போன்ற பணிகளையும் பாதுகாப்பாக செய்கிறார்கள்.
வழியில் ரயில் பாதையில் பணிகள் நடந்தால் மற்றும் தடங்கல் இருந்தால் அது குறித்து மெதுவாக செல்ல வேண்டிய எச்சரிக்கை அறிவிப்பை ரயில் என்ஜின் பைலட்டுகளிடம் வழங்குகின்றனர்.
சிறிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் விரைவாக செல்லும்போது ஒருபுறம் நிலைய அதிகாரியும், மறுபுறம் பாய்ன்ட் மேனும் பச்சைக் கொடியுடன் நின்று ஓடும் ரயிலில் ஏதாவது குறைபாடு இருக்கிறதா என ஆய்வு செய்வார்கள்.
பாதுகாப்பு குறைபாடு இருந்தால் உடனடியாக சிவப்புக் கொடியைக் காட்டி ரயிலை நிறுத்தி மாற்று ஏற்பாடு செய்கின்றனர். ரயில் பெட்டி அல்லது என்ஜின் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் நின்றால், அவை தானாகவே நகன்று செல்லாமல் இருக்க சக்கரங்களுக்கு அடியில் அடிக்கட்டை வைப்பது, சங்கிலிகள் இணைத்து பூட்டுவது போன்ற பணிகளிலும் ஈடுபடுவார்கள்.
இவர்களுக்குப் பாதுகாப்பு புத்துணர்வு பயிற்சி குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படுகிறது. இப்பணிகளை மகளிர் செய்யும்போது, பாய்ன்ட் உமன் என அழைக்கப்படுகின்றனர்.
இப்பணிகளுக்கு தகுதியுள்ள இளைஞர்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.