தமிழகம்

கொடைக்கானல் கிறிஸ்தவ பாதிரியார் ஆப்கானிஸ்தானில் கடத்தல்

செய்திப்பிரிவு

கொடைக்கானல் கிறிஸ்தவ பாதிரியார் திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் கொடைக்கானல் ஜேசு சபை கிறிஸ்தவப் பாதிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கொடைக்கானல் மலைக்கிராம பழங்குடியின மக்கள் மறுவாழ்வு, கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுக்க கொடைக்கானலில் தங்கியிருந்து சேவை புரிந்து வந்தார். மேலும், இலங்கை போரினால் தமிழகத்துக்கு வந்த இலங்கை அகதிகளைச் சந்தித்து அவர்கள் மறுவாழ்வுக்காகவும் பாடுபட்டு வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்குச் சென்று, அங்கும் இரு ஆண்டுகள் தங்கியிருந்து போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கிடைக்க வெளிநாடுகள் மூலம் உதவிகள் பெற்றுக் கொடுத்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் நாட்டுக்குச் சென்று அங்கு போரில் பாதிக்கப் பட்ட அகதிகள் மறுவாழ்வுக்கு பாடுபட்டு வந்தார்.

மேலும், அந்த நாட்டில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பிரசங் கமும் செய்துள்ளார்.

இது தீவிரவாதிகளுக்கு அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு தனியார் பள்ளி விழாவில் பாதிரியார் பிரேம்குமார் பங்கேற்கச் சென்றுள்ளார். பள்ளியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தான் தங்கியிருந்த இடத்துக்கு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் கும்பல் பாதிரியார் பிரேம்குமாரை கடத்திச் சென்றது.

தற்போது அவரை ரகசிய இடத்தில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த தமிழகத்தில் உள்ள ஜேசு சபை கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT