படகு மூலம் தினமும் நூற்றுக்கணக்கானோர் ஆற்றைக் கடக்க உதவுவதை, மேற்கொண்டு 81 வயதிலும் உழைப்பின் மகிமையை உணர்த்தி வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர்.
பள்ளிக் குழந்தைகள் முதல்...
குழித்துறை பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது அஞ்சாலிக் கடவு கிராமம். இங்கு ஆற்றின் ஒரு கரை விளாத்துறை ஊராட் சியிலும், மறுகரை மெது கும்மல் ஊராட்சியிலும் இருக் கிறது. இப்பகுதியில் ஆற்றைக் கடந்தால் 200 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் மறுகரைக்கு சென்று விடலாம். அதுவே சாலை வழியாக செல்ல வேண்டுமானால் 12 கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டும்.
இவ்விரு ஊர்களுக்கும் இணைப்புப் பாலமாக, தனது படகை ஓட்டி, தன் வாழ்வை யும் சேர்த்து ஓட்டி வருகி றார் மூதாட்டி ரத்னபாய்(81). பள்ளிக் குழந்தைகள் முதல் தொழிலாளர்கள் வரை கூட்டம், கூட்டமாக காலை நேரத்தில் படகில் ஏறிக்கொள்கின்றனர்.
ஆற்றின் ஒரு கரையில் இருந்து, மறுகரை வரை கயிறு கட்டப்பட்டுள்ளது. படகை துடுப்பு வைத்து தள்ளுவதற்குப் பதில், இந்தக் கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டே, ஆற்றைக் கடக்கிறார் ரத்னபாய்.
அவர் கூறும்போது, “படகு ஓட்டுவதை எங்கள் குடும்பம் தலைமுறை, தலைமுறை யாக செய்து வருகிறது. என் கணவர் ராமையனுக்கு இதுதான் வேலை. இழுப்பு நோயால் அவர் பாதிக்கப்பட்டதும், படகு ஓட்டும் பணியில் இறங்கி னேன். முதலில் பெரிய மூங்கில் கம்பை வைத்து ஓட்டி னோம். அடுத்ததாக துடுப்பு பயன்படுத்தினோம்.
படகில் வருபவர்கள், அவர வர் சக்திக்கு ஏற்ப ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என கொடுப் பார்கள். அதை வைத்து குடும்பத்தை நடத்தினேன். 10 ஆண்டுகள் படுக்கையில் இருந்த என் வீட்டுக்காரர், 10 ஆண்டுகளுக்கு முன் காலமானார். எனக்கு 4 ஆண், 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இப்போது ஒரு ஆணும், ஒரு பெண்ணும்தான் இருக்கின்றனர்.
ஆண்டுக்கு ரூ.1000 செலவு
வயதாகிவிட்டதால் முன்பு மாதிரி துடுப்பு போட்டு படகை ஓட்ட முடியவில்லை. அதனால்தான் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு கயிறு கட்டிட்டேன். இந்தக் கயிறை கையால் இழுக்க, இழுக்க படகு முன்னோக்கி போகும். இந்த கயிறு ஒரு வருடத்துக்கு தாக்குப்பிடிக்கும். இதற்கே ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும்.
என்னோட படகு ஒரு வருடத்துக்கு முன்பு ஓட்டை விழுந்து பழுதாகிவிட்டது. அதைப் பழுது பார்க்கவும், புது படகு வாங்கவும் வசதி இல்லாமல் 5 மாதமாக படகு ஓட்டவில்லை. ஆற்றைச் சுற்றிப் போவது கஷ்டமாக இருக்கிறது.
படகை இயக்குமாறு தினமும் வந்து சொல்லிட்டு போவாங்க. மக்கள் கஷ்டப்படக் கூடாது, தலைமுறை, தலைமுறையா செஞ்ச இந்த சேவையையும் விடக் கூடாதுன்னு, புது படகை என் பேரன் அனி வாங்கிக் கொடுத்தான்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை நான் செய்யிறேன். அரசு ஏதாவது உதவி செய்தால் என் வாரிசுகளும் இந்த சேவையை தொடர்ந்து செய்வார்கள். இல்லாவிட்டால் என் காலத்தோடு இந்த படகோட்டமும் நின்றுவிடும்” என்றார்.