ஆரணி: ஆரணியில் பீட்ரூட் பொரியல் பாக்கெட்டில் எலி தலை இருந்ததாக புகாருக்கு உள்ளான ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபல சைவ ஹோட்டலில், காந்தி நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி முரளி என்பவர் நேற்று முன்தினம் 35 பார்சல் சாப்பாடு வாங்கிச்சென்றுள்ளார்.
அப்போது,பீட்ரூட் பொரியல் பார்சலில் எலிதலை இருந்ததாகக் கூறி,25-க்கும் மேற்பட்டோர் நேற்றுமுன்தினம் ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆரணி நகர போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், புகாருக்கு உள்ளான ஹோட்டலில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு நடந்துகொண்டிருந்தபோதே ஒரு எலி அங்கும், இங்கும் ஓடியதால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும் போது, ‘‘குறிப்பிட்ட பார்சல் கட்டும் நேரத்தில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தோம். மேலும், ஹோட்டல் சமையல் அறையின் சுகாதாரம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. அங்கு எலிகள் வந்து, செல்ல வாய்ப்புகள் உள்ளன. அவை வரும் வழிகளை அடைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
பொரியலில் எலி தலை இருந்ததாக புகார் கூறப்படும் நிலையில், எலியின் மற்ற உடல் பாகங்கள் இருந்ததாக எந்தப்புகாரும் வரவில்லை. அங்கிருந்து உணவு மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்துள்ளோம். எலி தலை புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளோம்’’ என்றார்.