தமிழகம்

காவேரிப்பட்டணம் | மலைப்பாம்பு சுற்றி இறுக்கியதில் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

காவேரிப்பட்டணம் அருகே மலைப்பாம்பை பிடிக்க முயன்ற போது, பாம்பு சுற்றி வளைத்து இறுக்கியதில் கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள பன்னிஹள்ளி அடுத்த குட்டப்பட்டி மேல்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது விவசாய நிலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்கியது. பின்னர், அங்குள்ள விவசாய கிணற்றின் அருகே 3 நாட்களாக இருந்தது.

இதைத் தொடர்ந்து, மலைப்பாம்பை பிடிக்க பனகமூட்லு கிராமத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளி நடராஜன் (50) என்பவரை நேற்று சின்னசாமி அழைத்து வந்தார்.

30 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகே இருந்த மலைப்பாம்பை பிடிக்க நடராஜன் முயன்றார். அப்போது, திடீரென பாம்பு, நடராஜனின் உடலை சுற்றியது.

பாம்பின் பிடியில் இருந்து தப்பிக்க நடராஜன் முயன்றபோது, அருகில் இருந்த கிணற்றில் பாம்புடன் தவறி விழுந்தார். இதில், நீரில் முச்சுத் திணறல் ஏற்பட்டு நடராஜன் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நடராஜனின் உடலை மீட்டனர்.

மலைப்பாம்பு கிணற்றில் பதுங்கியது. இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நடராஜனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

SCROLL FOR NEXT