தமிழகம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மீது மாணவியர் அளித்த புகார் குறித்து விசாரிக்க குழு அமைப்பு

செய்திப்பிரிவு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு உதவிப் பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து தொல்லை தருவதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவியர் கல்லூரி முதல்வர் அமுதவல்லியிடம் புகார் கடிதம் அளித்தனர்.

அதில், சட்டம் சார்ந்த மருத்துவப் பிரிவின் உதவிப் பேராசிரியரான மருத்துவர் சதீஷ்குமார் தங்களிடம் நடைமுறைக்கு மாறாக நடந்து கொள்வதாகவும், மாணவியருக்கு தொடர்ந்து பல்வேறு தொல்லைகள் கொடுப்பதால் வகுப்பில் மாணவியர் இயல்பாக பாடம் கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவர்கள் கண்மணி, கார்த்திகேயன், தண்டர் சீப், காந்தி ஆகியோரை விசாரணை அலுவலர்களாக கல்லூரி நிர்வாகம் நியமித்துள்ளது.

இது தொடர்பாக, மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவல்லியிடம் கேட்டபோது, ‘புகாரைத் தொடர்ந்து, 2-வது ஆண்டு மாணவ, மாணவியருக்கு உதவிப் பேராசிரியர் சதீஷ்குமார் வகுப்பெடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.

புகார் குறித்து விசாரணை அலுவலர்கள் விசாரித்த பின்னர் அது குறித்த அறிக்கை மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்படும். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்ககம் முடிவெடுக்கும்’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT