சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில், கொளத்தூர்-வில்லிவாக்கம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 6 மாதத்தில் ஒப்பந்தம் வழங்கமெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின்கீழ், ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 118.9 கிமீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன.
மாதவரம்-சிப்காட் சிறுசேரி வரை (3-வது வழித்தடம்) 45.8 கிமீ தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரை (4-வது வழித்தடம்) 26.1 கிமீ தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை(5-வது வழித்தடம்) 47 கிமீ தொலைவுக்கும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில், மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில் 41.2 கிமீ பாதை உயர்பட்ட பாதையிலும், 5.8 கிமீவழித்தடம் சுரங்கப்பாதையிலும் அமையவுள்ளன.
மொத்தம் 48 நிலையங்கள் இடம்பெறவுள்ளன. உயர் மட்ட பாதை அமைப்பதற்காக, பல இடங்களில் தூண்களை அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதேநேரத்தில், கொளத்தூர்-வில்லிவாக்கம் வரை சுரங்கப்பாதை பணிக்கு ஒப்பந்தம் வழங்கி பணிகளை தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 40 மெட்ரோ ரயில் நிலையங்களை உள்ளடக்கிய 41.2 கிமீ நீளத்துக்கு உயர்மட்ட பாதை அமைக்க 3 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூண்கள் அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் (அடித்தளம் கட்டமைப்பு பணிகள்), தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நந்தம்பாக்கம் அருகே அடையாற்றை கடக்கும்வகையில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக, மொத்தம் 8 தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுதவிர, இந்த வழித்தடத்தில் கொளத்தூர் மெட்ரோ சந்திப்புமுதல் வில்லிவாக்கம் மெட்ரோவரை சுரங்கப்பாதை அமையவுள்ளது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை ரயில் நிலையமும் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அடுத்த 6 மாதங்களில் ஒப்பந்தம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில், நாதமுனி-கொளத்தூர் வரையிலான பாதையில் நாதமுனி-ரெட்டேரி வரை 5.5கிமீ தொலைவுக்கு ஒரே மாதிரியாக பூமியில் இருந்து சில அடி ஆழத்திலேயே கடினமான பாறைகள் வருகின்றன.
இங்குகுறிப்பிட்ட இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும்போது, சுரங்கம் துளையிடும் இயந்திரம் (டிபிஎம் இயந்திரம்) மிகவும் சிரமப்படும். இதன் காரணமாக, இந்த இடத்தில் டெண்டர் மூலமாக ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.