தமிழகம்

அரசு பள்ளி மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கூடுதல் பாடத்திட்டங்கள் வழங்கப்படும்: சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் ஜேஇஇபோன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கூடுதலாக பாடத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார்.

சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கிண்டி ஐஐடிவளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாணவர்கள் நுழைவுத்தேர்வு தரவரிசை பட்டியலில் எந்த இடத்தில் இருந்தாலும், சென்னை ஐஐடியில் அவர்களுக்கு தேவையான படிப்பை தொடர முடியும். ‘இண்டர் டிசிப்ளினரி’ எனப்படும், இரட்டை பட்டம் பெறும் முறையின் வாயிலாக மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த துறையில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு வேறு ஒரு பாடப்பிரிவையும் கற்க முடியும்.

அதன்படி, மாணவர்கள் தற்பொழுது தேர்ந்தெடுத்து படிக்கும் பாடப்பிரிவில் தங்களுக்கு திருப்திஇல்லை எனில், அதே படிப்புடன் கூடுதலாக தங்களுக்கு விருப்பமான பாடத்தையும் எடுத்து படிக்கலாம். அந்த வகையில் தற்போது சென்னை ஐஐடியில் ‘இண்டர் டிசிப்ளினரி’ முறையில் 10 பாடப்பிரிவுகள் உள்ளன. மேலும், இன்னும் 4 ஆண்டுகளில் 20 பாடப்பிரிவுகள் அதிகரிக்கப்படும்.

இந்தியாவின் எதிர்கால கல்வித் திட்டமாக இந்த இரட்டை பட்டம் பெறும் முறை இருக்கும் என உறுதியாக கூறுகிறேன். ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு கூடுதலான பாடங்களை படிக்க வேண்டி உள்ளது.

பிளஸ் 2 பாடத்திட்டத்தைத் தாண்டி கூடுதலான பாடங்கள் படிக்க வேண்டிய நிலை இருப்பதால் 5-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை போட்டி தேர்வுக்கு தயாராகும் விதமாக சிறிய அளவிலான பாடங்களை இணைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

மேலும் தமிழக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக 5 முதல் பிளஸ் 2 வரை பாடத் திட்டங்களில் கூடுதலாக பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளன. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் சென்னை ஐஐடியை விட மும்பையில் சேர்ந்து படிக்கவே விரும்புகிறார்கள்.

5-ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகத்தில் உள்ளவைதான் ஜேஇஇ தேர்வுக்கு உதவியாக இருக்கும். எனவே இனி அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மூலம்மாணவர்களுக்கு ஜேஇஇ போன்றதகுதி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகிராமப்புற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT