தமிழகம்

சில்லறை தட்டுப்பாட்டால் வணிக நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு: 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

செய்திப்பிரிவு

சில்லறை நோட்டு தட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் பல்வேறு வணிகங்களில் ஈடுபடும் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 50 சதவீதத்துக்கும் மேல் ரொக்கமாக கையாளக்கூடிய வணிகமே நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் அறிவிப்பால் கடந்த 14 நாட்களாக 15 சதவீத வணிகம் மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால் இம்மாதத்துக்கான கடை வாடகை, மின் கட்டணம், தொழிலாளர்களுக்கு கூலி ஆகியவற்றை தரமுடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. மாநிலம் முழுவதும் வணிகம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதிலிருந்து மீள, வணிகர்களுக்கு 2 ஆண்டுகள் ஆகும்.

அதனால் உடனடியாக புதிய 500 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சிட்டு வங்கிகளில் எளிய முறையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் புழக்கத்தில் விட வேண்டும். வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர், தங்கள் வங்கி நடப்பு கணக்கிலிருந்து வாரத்துக்கு ரூ.2 லட்சமாவது எடுக்க அனுமதிக்க வேண்டும்.

மின்னணு வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பதிவுபெற்ற வணிக மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்களை வங்கிகள் உடனடியாக வழங்க வேண்டும். அதற்கான சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 29-ம் தேதி சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது:

தமிழகத்தில் 5 லட்சம் மளிகைக் கடைகளும், சிறு கடைகளும் உள்ளன. இந்த வணிகர்கள் வங்கிக் கணக்கே இல்லாத ஏழை எளிய மக்களுக்கு பொருட்களை கொண்டுபோய் சேர்க்கின்றனர். தற்போது சில்லறை தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஏழை எளிய மக்களுக்கு மளிகைப் பொருட்களை கடன் கொடுத்து வருவதும் மளிகைக் கடைகள்தான். இது அரசு செய்ய வேண்டிய வேலை. ஆனால் அதை நாங்கள் செய்து வருகிறோம். பொதுமக்களுக்கு காலம் காலமாக சில்லறை கொடுப்பதே மளிகை கடைகள்தான். மத்திய அரசின் அறிவிப்பால் மளிகைக் கடை வணிகம் முற்றிலும் முடங்கி, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அதனால் மளிகை கடை வியாபாரிகளுக்கு, வங்கிகளில் சிறப்பு கவுன்ட்டர் தொடங்கி, 100 ரூபாய் நோட்டுகளாக வழங்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT