கடந்த இரு மாதங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் நிர்வாக செயல்பாடுகளில் 38-வது இடத்திலிருந்து 12-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் பொதுமக்கள் சேவையில் அதன் நிர்வாகச்செயல்பாடுகளை கணக்கிட்டு, அதற்கேற்ற தர வரிசை, தலைமைச் செயலகத்தில் அளவிடப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 2 கோட்டங்கள், 6 வருவாய் வட்டங்களுடன் புதிதாக உருவான கள்ளக்குறிச்சி மாவட்டம், 2019-ம் ஆண்டு முதல் நிர்வாக ரீதியாக செயல்படத் தொடங்கியது. இருப்பினும் பொதுமக்கள் சேவையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு, தரவரிசையில் 38-வது இடத்திலேயே நீடித்து வந்தது.
இந்த நிலையில் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில், கடந்த ஜூலை மாதம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம்,மாநில அளவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. இதையடுத்து இம்மாவட்டத்தின் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், டிஎஸ்பி உள்ளிட்ட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஷ்ரவன்குமார்,பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு, கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதே போல் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அலுவலர்கள் இருக்கையில் உள்ளனரா, சேவை கோரி வரும் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா என ஆய்வு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளிலும் இ. பட்டாக்கள் வழங்குவது, சாதிச் சான்றிதழ்கள் வழங்குவதிலும் மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வுகாண்கிறது.
இதுவரை நிர்வாக செயல்பாடுகளில் 38-வதுஇடத்திலேயே நீடித்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கடந்த ஆகஸ்டு மாதம் 18-வது இடத்திற்கும், தற்போது, 12-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் பேசியபோது, "அலுவலர்களின் சிறந்த ஒத்துழைப்பு இருக்கிறது. 3,592பேருக்கு இ.பட்டாக்கள் வழங்கியுள்ளோம்.
இன்னும் 1,800 பேருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். மாநில அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் இந்த அளவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் மனுக்களை நிராகரிப்பதை தவிர்த்து, அவர்களின் தேவையை பூர்த்தி செய்கிறோம். ஏதேனும் ஒருவகையில் மனுவுக்கு தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மாநிலத்திலேயே முதல் இடத்துக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தைக் காட்டிலும், அரசிடம் சென்றால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுவோடு வருவோரை, மன நிம்மதியடையச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது" என்றார்.