எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இலவச மாக பட்டப்படிப்பு படிக்கும் திட்டத்தை இக்னோ பல்கலைக்கழகம் அறிமுகப்படுத் தியுள்ளது. நெசவாளர்கள், அவர்களது பிள்ளைகள் பிளஸ் 2 படிக்காமலேயே பட்டப்படிப்பில் சேருவதற்கான இலவச 6 மாதகால ஆயத்தப் படிப்பையும் ஜனவரியில் அறிமுகப்படுத்த உள்ளது.
மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ), நாடு முழுவதும் தொலைதூரக்கல்வித் திட்டத்தில் 180 விதமான இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுகலை டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இலவசமாக இளங்கலை பட்டப் படிப்புகளை படிப்பதற்கான புதிய கல்வித் திட்டத்தை இக்னோ கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து இக்னோ பல்கலைக்கழக சென்னை மண்டல இயக்குநர் எஸ்.கிஷோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், கல்லூரி சென்று நேரடியாக படிக்க முடியாதவர்கள், பணியில் இருந்துகொண்டு மேற்படிப்பு படிக்க விரும்புவோருக்காக இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்துகிறது. இதில் சேர வயது வரம்பு கிடையாது. பிளஸ் 2 முடிக் காதவர்களும் பட்டப் படிப்பில் சேரும் வகையில் 6 மாதகால ஆயத்தப் படிப்பை (Preparatory Course) நடத்துகிறோம். இப்பயிற்சியை முடித்துவிட்டு இளங்கலை படிப்பில் சேரலாம். இது அங்கீகரிக்கப்பட்ட படிப்புமுறை ஆகும்.
உயர்கல்வி படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில், இலவச பட்டப் படிப்பு திட்டத்தை இக்னோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பிளஸ் 2 முடித்த எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பிஏ, பிகாம், பிஎஸ்சி, பிசிஏ, பிஎஸ்டபிள்யு (இளங்கலை சமூக பணி), பிடிஎஸ் (இளங்கலை சுற்றுலா கல்வி) ஆகியவற்றை இலவசமாகப் படிக்கலாம். படிக்கும் 3 ஆண்டுகளிலும் அவர்கள் எந்த கல்விக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. சாதாரணமாக இளங்கலை படிப்பதற்கு, படிப்புக்கேற்ப ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கல்விக் கட்டணச் சலுகையைப் பெற, படிப்பில் சேரும்போது உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில், மத்திய ஜவுளி அமைச்சகத்து டன் இக்னோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பில் சேர உதவும் 6 மாதகால ஆயத்தப் படிப்பை நெசவாளர்கள், அவர்களது பிள்ளைகள் இலவசமாகப் படிக்கலாம். அவர்கள் விண்ணப்பக் கட்டணம்கூட செலுத்த வேண்டாம். இந்த கல்வித் திட்டம் ஜனவரி முதல் அமல்படுத்தப்படுகிறது.
வங்கி ஊழியருக்கு எம்பிஏ படிப்பு
வங்கிப் பணியில் உள்ளவர்களுக்காக பிரத்யேக எம்பிஏ (பேங்கிங், பைனான்ஸ்) படிப்பையும் இக்னோ வழங்குகிறது. பட்டப் படிப்பு, 2 ஆண்டுகால பணி அனுப வத்துடன், சிஏஐஐபி தேர்வில் தேர்ச்சி பெற்ற வங்கிப் பணியாளர்கள் இதில் சேரலாம். இது இரண்டரை ஆண்டுகாலப் படிப்பு. இதில் சேர நுழைவுத்தேர்வு இல்லை. வங்கிப் பணியாளர்களின் பதவி உயர்வுக்கு இது உதவும்.
இக்னோவில் இளங்கலை படிப்பை அதிகபட்சம் 6 ஆண்டுகளிலும், முதுகலை படிப்பை 5 ஆண்டுகளிலும் முடிக்க வேண்டும். இதற்குள் முடிக்காவிட்டால், மீண்டும் அட்மிஷன் பெற்று படிப்பை முடிக்கலாம்.
இக்னோவில் 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. டிசம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தாமதக் கட்டணம் செலுத்தி டிசம்பர் 28-ம் தேதி வரை சேரலாம். ஆன்லைன் (www.onlineadmission.ignou.ac.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிஏ படிப்பவர்களுக்கு சிறப்பு பி.காம்.
சிஏ, ஏசிஎஸ், ஐசிடபிள்யூஏ படிப்பவர்களுக்காக சிறப்பு பிகாம் படிப்பை இக்னோ வழங்குகிறது. பிளஸ் 2 முடித்துவிட்டு இந்த தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் மாணவர்கள் இக்னோவில் ஓராண்டிலேயே சிறப்பு பி.காம். படிப்பை முடித்துவிடலாம். அவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களில் படித்த பாடங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு உரிய கிரெடிட் கொடுத்து இக்னோ பட்டப் படிப்பு சான்றிதழ் வழங்குவது குறிப்பிடத்தக்கது.