தமிழகம்

பக்தர்களின் பசியாற்றுவது பெரும் பாக்கியம்- நற்தொண்டு செய்யும் நவதாண்டவ தீட்சிதர்

குள.சண்முகசுந்தரம்

‘‘பசி என்பது ஒரு அக்கினி. அதை உடனடியாக அணைக்க வேண்டும். என்னால் முடிந்தது, தினமும் நூறு பேருக்கு பசியாற்றும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன்’’ என்கிறார் நவதாண்டவ தீட்சிதர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பூஜை வைக்கும் பரம்பரை வழி தீட்சிதரான நவதாண்டவ தீட்சிதர், கடந்த 7 ஆண்டுகளாக தினமும் நூறு பக்தர்களுக்கு தனது சொந்த முயற்சியில் அன்னதானம் வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த எண்ணம் தோன்றியது எப்படி? அவரே விளக்குகிறார்...

ஒரு காலத்தில் சிதம்பரத்தில் மடாலயங்கள், தர்ம சாலைகள், அன்னச் சத்திரங்கள் எல்லாம் இருந்தது. இப்போது எதுவும் இல்லை. தில்லையில் இல்லாதது எதுவும் இல்லை என்பார்கள். ஆனால், இப்போது இங்கு இல்லாத ஒன்று அன்னதானம். பஞ்சபூதத் தலங்கள் என்று சொல்லப்படும் திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, காஞ்சிபுரம், சிதம்பரம் ஆகிய 5 திருத்தலங்களில் சிதம்பரத்தில் மட்டுமே அன்னதானத் திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் கட்டுப்பாட்டில் இல்லாததால் இங்கு தமிழக அரசின் அன்னதானத் திட்டமும் செயல்பாட்டில் இல்லை.

நடராஜரை தரிசிக்க தினமும் பத்தாயிரம் பேராவது வருகின்றனர். காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணிக்குள் பசி வேளையில் மட்டுமே சுமார் ஆயிரம் பேர் வருகின்றனர். இவர்களில் பலர், நடராஜரை வழிபட்டுவிட்டு எங்காவது அன்னதானம் நடக்காதா என்று தேடுவது வழக்கமாகிவிட்டது. 7 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் கோயிலில் பூஜையை முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தேன். அப்போது ஒரு ஏழை குடும்பத்தினர் என்னிடம் வந்து, ‘பசிக்கிறது.. இங்கே அன்னதானம் போடுவதில்லையா’ என்று கேட்டனர். அது என் மனதை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டது.

இவ்வளவு பெரிய திருத்தலத்துக்கு வந்து, இப்படி பசியோடு போகிறார்களே என்று வருந்தினேன். கவலையை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டபோது, ‘கோயிலில் போடாவிட்டால் என்ன.. நம்ம சக்திக்கு முடிந்தவரை தினமும் ஒரு சிலரையாவது பசியாற்றலாமே’ என்ற எண்ணம் ஏற்பட்டது. எனது மனைவி உள்ளிட்ட அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

தெற்கு ரத வீதியில் உள்ள எங்களுக்குச் சொந்தமான கட்டிடத்தையே அன்னதானக் கூடமாக மாற்றினோம். அப்போதைக்கு கையில் இருந்த காசை வைத்து சிறிய அளவில் அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். அதுதான் இப்போது, தினமும் நூறு பேருக்கு பசியாற்றும் தைரியத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கிறது.

நூறு பேருக்கு ஒருவேளை உணவு சமைக்க குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் தேவைப்படும். அன்பர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு வருடத்தில் பாதி நாட்களைத்தான் சமாளிக்க முடியும். அதற்காக மீதி நாட்களில் அன்னதானம் போடுவதை நிறுத்திவிட முடியாதே; அந்த நாட்களை எங்களது சொந்தப் பணத்திலிருந்துதான் சமாளிக்கிறோம்.

கோயிலில் பணி செய்த நேரம் போக மீதி நேரத்தில் வேலைக்கு போனால் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். ஆனால், அன்ன தானத்தை கவனிக்க வேண்டி இருப்பதால் வேறெந்த வேலைக்கும் போவதில்லை. அன்னதான கட்டி டத்தை வாடகைக்கு விட்டால் மாதம் ரூ.25 ஆயிரம் கிடைக்கும் ஆனால், தினமும் நூறு பேருக்கு பசி தீர்க்கும் பாக்கியம் கிடைக்காதே.

சீர்காழியிலிருந்து தஞ்சைவரை உள்ள கிராமங் களில் பிராமணர்கள் சொற்பமான வருமானத்தில் கோயில்களில் பூஜை பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். அந்தக் குடும்பங் களில் இருந்து வீட்டுக்கு ஒரு பிள்ளையை தத்தெடுத்து. இலவசமாக வேதாகமம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது அடுத்த சேவை. இதற்காக ‘திருச்சிற்றம்பலம் வேதபாடசாலை’ஒன்றை ஏற்படுத்த இருக்கிறேன். என் மகனும் அண்ணன் மகன்கள் இருவரும் முறைப்படி வேதம் கற்றவர்கள். நாங்கள் தத்து எடுக்கும் குழந்தைகளுக்கு அவர்களே குருமார்களாக இருந்து வேதம் சொல்லிக் கொடுப்பார்கள்.. மனநிறைவோடு சொல்கிறார் நவதாண்டவ தீட்சிதர். (தொடர்புக்கு 93455 12976)

SCROLL FOR NEXT