தமிழகம்

ரூபாய் நோட்டு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்: வாசன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

வரும் 26-ம் தேதி அன்று தமாகா சார்பில் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 7 கோடி பேர். இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். விவசாயம் முக்கியத் தொழில். விவசாயத் தொழிலை நம்பித்தான் பிற தொழில்கள் இயங்குகின்றன. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் நலிவடைந்து விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் சிறு, குறு தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் கல்வி நிலையங்களில் முறையற்ற கல்விக்கட்டண வசூல், தேசியக் கல்விக்கொள்கையில் உள்ள முரன்பாடு போன்றவற்றால் தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பெறுவதில் பாதிப்பு அடைகிறார்கள்.

இச்சூழலில் தமிழகத்தில் வேலை வாய்ப்பில்லாமல், சுய தொழிலும் செய்ய முடியாமல் தமிழக மக்கள் பொருளாதரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நாட்டை ஆளுகின்ற ஆட்சியாளர்கள் தான்.

இந்நிலையில் வரும் 26-ம் தேதி அன்று தமாகா தமிழகம் முழுவதும், மாவட்ட வாரியாக, நகரம் முதல் கிராமம் வரை, பட்டி - தொட்டி எங்கும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துகிறது. இதன் மூலம் தமிழக மக்களின் பிரச்சினைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பொது மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தான் தமாகாவின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.

இந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களில் தற்போதுள்ள முக்கியப் பிரச்சினையான பணத்தட்டுப்பாடு, புதிய பணம் மாற்றுவதில் உள்ள சிரமங்கள் போன்றவை மிக முக்கிய அம்சமாக இருக்கும். அதாவது கடந்த 08.11.2016 அன்று மாலை பிரதமர் திடீரென்று 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் நாட்டில் உள்ள சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு சிரமங்கள், இன்னல்கள், இடையூறுகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். மேலும் விவசாயத் தொழில் உட்பட பல்வேறு சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பிரச்சினைக்கு மத்திய அரசு தான் காரணம்.

எனவே பொது மக்கள் தாங்கள் சேமித்த பணத்தை வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் நீண்ட நேரம் காத்திருக்காமல் பெறவும், பணப்புழக்கம் ஏற்படவும், சில்லறைத் தட்டுப்பாட்டை போக்கிடவும் மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.

இதனை முன்னிலைப் படுத்தி தமாகாவின் தெருமுனைப் பிரச்சாரங்கள் அமையும். இதில் தமாகாவின் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என தமாகா வினர் அனைவரும் கலந்து கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT