சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம் 
தமிழகம்

2013-ல் பாலத்தை சேதப்படுத்திய வழக்கில் பாமகவிடம் இழப்பீடு கோரி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ் ரத்து: ஐகோர்ட் 

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சித்திரை திருவிழா நிகழ்ச்சியின்போது பாலத்தை சேதப்படுத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சியிடம் 18 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து கடந்த 2013-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பாமகவினர் காவல்துறை அனுமதியை மீறி மரக்காணம் அருகேயுள்ள கட்டயம் தெரு என்ற பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் ஓடை பாலம் ஆகியவற்றை சேதப்படுத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், புதுச்சேரி - மைலம் சாலையில் உள்ள கரசனூரில் உள்ள பாலத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், 18 லட்ச ரூபாய் இழப்பீடாக அரசுக்கு செலுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி பாமகவின் அப்போதைய தலைவர் ஜி.கே. மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "கலவரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியதாக கூறி நோட்டீஸ் அனுப்பியது தவறு" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "இழப்பீடு செலுத்தக் கோரி பாமகவுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு முகாந்திரம் இல்லை” எனக் கூறி தமிழக அரசு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT