சென்னை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று, மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: "அறிஞர் அண்ணாவின் 114-வது ஆண்டு பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15-ம் தேதியன்று காலை 8 மணியளவில், மதுரை கீழவெளி வீதி - மேல வெளி வீதி சந்திப்பு, நெல்பேட்டை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
அன்றைய தினம் சென்னையில் காலை 8 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இந்த நிகழ்வில், தமிழக அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள், தவறாது கலந்துகொள்ள வேண்டும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.