பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோர். | படங்கள்: எல்.பாலச்சந்தர் | 
தமிழகம்

இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிப்பு: பரமக்குடியில் கட்சித் தலைவர்கள் மரியாதை

செய்திப்பிரிவு

சென்னை / பரமக்குடி: இமானுவேல் சேகரன் 65-வதுநினைவு தினத்தையொட்டி, தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும், சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவர்களை அணி திரட்டி, இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய தீரர் இமானுவேல் சேகரனின் நினைவுநாளில் அவரது போராட்டங்களையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியவரும், சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளில் அவர்தம் தியாகத்தை போற்றுவோம்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இந்திய சுதந்திர போராட்ட வீரரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவருமான இமானுவேல் சேகரனின் 65-வது நினைவு நாளில் அன்னாரை போற்றி வணங்குவோம்.

பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையிலான
கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தில் சமூகநீதி மற்றும் சம உரிமைக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்களை நினைவில் கொள்வோம்.

சமக தலைவர் ஆர்.சரத்குமார்: ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் போராடிய சமூக போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாளில் அவரை போற்றுகிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சமூகத் தீமையான தீண்டாமையை அகற்றுவதற்கு பாடுபட்ட இமானுவேல் சேகரன் நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

இதேபோல், நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் சீமானும் விடுதலை சிறுத்தைகள் கட்சிதலைமை அலுவலகத்தில் திருமாவளவனும் இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அக்கட்சியினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, கயல்விழி செல்வராஜ், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் தர்மர் எம்.பி.உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், காங்கிரஸ், பாமக, மதிமுக, அமமுக கட்சியினர், இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபா ராணி உள்ளிட்ட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT