சென்னையில் நேற்று நடைபெற்ற உலக சகோதரத்துவ தின விழாவில் `தமிழ் மண்ணில் விவேகானந்தரின் வீரமுழக்கம்' என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பை வெளியிட்டார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். உடன், ராமகிருஷ்ணா மிஷன் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, பாரதிய வித்யா பவன் நிர்வாகி கே.என்.ராமசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி. படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

இந்திய தேசம் 2047-ல் உலகுக்கே குருவாக மாறும்: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா 2047-ல் சுயசார்பு நாடாக மட்டுமின்றி, உலகுக்கே குருவாக மாறும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஸ்ரீராமகிருஷ்ண மடம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் நேற்று உலக சகோதரத்துவ தின விழாநடைபெற்றது. தலைமை வகித்து தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

1893-ல் சிகாகோவில் சுவாமிவிவேகானந்தர் ஆற்றிய உரையைப் படித்தால், நம் வாழ்க்கைக்கு பெரிய வழிகாட்டுதல் கிடைக்கும். நம்மை பலவீனராக நினைப்பதே பாவம் என்றார் விவேகானந்தர். 1893-ம் ஆண்டிலேயே உலகுக்கு ஒற்றுமையைப் போதித்து, யாத்திரை மேற்கொண்டார்.

இந்து மதம் சகிப்புத்தன்மை மிக்கது. மற்ற மதத்தினரின் கருத்துகளை மதிப்பது. நான் எனது குரலை உயர்த்திக் கொண்டே இருப்பேன், கேட்பவர்கள் கேட்கட்டும் என்று விவேகானந்தர் கூறினார். எனவே, நம் குரலை உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அந்தக் காலத்திலேயே சமூகநீதி குறித்து பேசியவர் விவேகானந்தர். இப்போது விளம்பரத்துக்காகத்தான் சமூக நீதி பேசப்படுகிறது.

ஆங்கிலேயர் இல்லை என்றால், ஒரு ஊசிகூட தயாரிக்க முடியாது என்றார்கள். தற்போது தடுப்பூசி தயாரித்து, 157 நாடுகளுக்கு வழங்கிஉள்ளோம். இந்திய தேசம் 2047-ல்சுயசார்பு நாடாக மட்டுமின்றி, உலகுக்கே குருவாக மாறும்.

சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் மக்களிடம் இன்னும் அதிகமாக போய்ச்சேர வேண்டும். சிலர் சுயநலத்துக்காக நம்மைப் பிரிக்க நினைக்கின்றனர். ஆனால் நாம் ஒற்றுமையாக இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐஐடி சென்னை இயக்குநர் வி.காமகோடி பேசும்போது, “உலகம் முழுவதும் இன்று சகோதரத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. உண்மையில் சகோதரத்துவம் குறித்து பேசும் ஒரே தகுதி இந்தியாவுக்குத்தான் உண்டு. எந்த நாட்டின் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியது கிடையாது. நமக்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்தது.

இன்னும் பல துறைகளில் நமக்கு சுதந்திரம் தேவை. 2047-க்குள் தொழில்நுட்பத்தில் பலமான, வல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும். இளைஞர்களால்தான் இதை சாத்தியப்படுத்த முடியும். மாணவர்கள் தொழில்நுட்பங்கள் சார்ந்து நிறைய படிக்க வேண்டும். ஆழமாக கற்க வேண்டும். பல துறையைச் சேர்ந்தவர்கள் இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

ஒரு துறையைச் சேர்ந்தவர்கள், பரந்து சிந்தித்தால் 2047-க்குள் தொழில்நுட்பத்தில் பலமான நாடாக மாறும். மாணவர்கள் சமூக வலைதளங்களை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும்” என்றார். விழாவில், ராமகிருஷ்ணமடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் மத் சுவாமிகவுதமானந்தஜி மகராஜ், பாரதியவித்யா பவன் நிர்வாகி கே.என்.ராமசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT