‘தி மெட்ராஸ் கெனைன் கிளப்’ சார்பில் சென்னையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில், சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு நேற்று பரிசு வழங்கினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். உடன், கிளப் தலைவர் சி.வி.சுதர்சன், புரவலரும், கண்காட்சித் தலைவருமான `இந்து' என்.ராம் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட, சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

சென்னை அடையாறில் உள்ள குமார ராணி முத்தையா கலை, அறிவியல் கல்லூரித் திடலில், `தி மெட்ராஸ் கெனைன் கிளப்' சார்பில் கடந்த 2 நாள்களாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

அதில், ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நாய்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர், நாய்களின் உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். தொடர்ந்து, வெற்றிபெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்குப் பரிசு வழங்கினர்.

இந்தியாவில் சிறந்த இனத்துக்கான பரிசு கன்னி நாய்க்கு வழங்கப்பட்டது. இதேபோல, இன வாரியாக சிறந்த நாய்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. அதில், சில முக்கியஸ்தர்கள் பெயர்களிலும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் `இந்து' கோப்பை பல்லப் சாகா என்பவரது அமெரிக்கன் காக்கர் ஸ்பேனியல் இன நாய்க்கு வழங்கப்பட்டது. நடிகர் விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் வளர்க்கும் நாய்கள் 3 பரிசுகளை வென்றன. அவற்றை விஜயபிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், மெட்ராஸ் கெனைன் கிளப் தலைவர் சி.வி.சுதர்சன், செயலர் எஸ்.சித்தார்த், கண்காட்சித் தலைவரும், கிளப்பின் புரவலருமான `இந்து' என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT