வெள்ள பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு அமைத்துள்ள 20 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மைக் குழு ஒரு வாரத்தில் கூடி முக்கிய முடிவுகளை எடுக்க அரசுக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவி்ட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர் பாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தானாக முன் வந்து வழக்கை விசாரித்தது. இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆலோ சனைக்குழுவை அரசு அமைக்காவி்ட்டால் நீதிமன்றமே அமைக்கும் என உயர் நீதிமன்றம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பேரிடர் மேலாண்மை தொடர்பாக 20 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைத்து அரசு கடந்த 18-ம் தேதி ஆணை பிறப்பித்துள்ளதாக கூறி அந்த ஆணையை சமர்ப்பித்தார்.
அதன்படி வருவாய் நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் கே.சத்யபால் தலைவராகவும், வருவாய் துறைச் செயலர் பி.சந்திரமோகன் இணை தலை வராகவும், அண்ணா பல்கலைக் கழக பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை மைய பேராசிரியர் திருமலைவாசன் உள்ளிட்ட 18 பேர் உறுப்பினர்களாகவும் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்த இடத்திலேயே புதிதாக கட்டுமானம் கட்டப்பட்டு வருவதாகக்கூறி புகைப்பட ஆதாரங்களை தலைமை நீதி பதியிடம் சமர்ப்பித்தார்.
அந்த ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், புதிதாக அமைக்கப்பட்ட பேரிடர் மேலாண்மைக்குழு ஒரு வாரத்தில் கூடி வெள்ள பாதிப்புகளை தடுப்பது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.