குற்றாலம் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள். 
தமிழகம்

குற்றாலம் பிரதான அருவியில் 6-வது நாளாக நீடிக்கும் தடை

செய்திப்பிரிவு

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. தென்காசி மாவட்டம் கடனாநதி அணையில் 3 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் 2 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் 76.40 அடியாக இருந்தது. ராமநதி, கருப்பாநதி அணை, குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஆகிய 4 அணைகளும் நிரம்பியுள்ள தால் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப் படுகிறது.

குற்றாலம் பிரதான அருவியில் அதிக நீர்வரத்து உள்ளதால் தொடர்ந்து 6-வது நாளாக நேற்றும் இந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பிரதான அருவியில் தடை காரணமாக குளிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் மற்ற அருவிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,264 கனஅடி நீர் வந்தது. 1,321 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 104.75 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 113.22 அடியாக இருந் தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 175 கனஅடி நீர் வந்தது. 200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 76.55 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 13.25 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 46.25 அடியாகவும் இருந்தது.

SCROLL FOR NEXT