தமிழகம்

மதுரை சிந்தாமணி திரையரங்கு இடிப்பு

என்.சன்னாசி

மதுரையில் பழமையான சிந்தாமணி திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒரு ஜவுளி நிறுவனம் பிரமாண்டமான கட்டிடம் கட்ட உள்ளது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் அடையாளங்கள் ஏராளம். இந்த நகரின் ஆரம்ப கால அடையாளங்கள் இளைய தலைமுறையினருக்கு தெரியாத அளவுக்கு சிறிது சிறிதாக சிதைந்து வருகிறது.

இதன் ஒரு அங்கமாக சினிமா ரசிகர்கள், ரசிகர் மன்றங்கள் நிறைந்த நகரம் மதுரை எனலாம். எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் 1980-க்கு பின் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு போன்ற நடிகர்களின் படங் களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரையரங் குகளில் அலைமோதும். 10 மணி நேரத்திற்கு மேல் திரையரங்கு வாசல்களில் காத்திருந்து படம் பார்த்த காலமெல்லாம் இருந்தது. அந்த வகையில் மதுரையில் திரையரங்குகள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தன.

ஆசியாவில் பெரிய திரையரங்கு என்றழைக்கப்பட்ட தங்கம் திரையரங்கு தற்போது சிதைந்து வர்த்தக நிறுவனமானது. தினமணி டாக்கீஸ், சந்திரா டாக்கீஸ், தேவி தியேட்டர் போன்ற கொடி கட்டிப் பறந்த தியேட்டர் களும் கால சூழலால் மறைந்தன. அந்த வரிசையில் தற்போது, மதுரை நெல்பேட்டை அருகில் உள்ள பழமையான சித்தாமணி திரையரங்கும் சிக்கிக் கொண்டது. இந்த தியேட்டர் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர், சிவாஜி நடித்த பல படங்கள் இங்கு 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்துள்ளன. நடிகர் பாக்கியராஜ் நடித்த முந்தானை முடிச்சு போன்ற ரசிகர்களை ஈர்த்த பல படங்கள் இங்கு ரிலீஸ் செய்யப்பட்டன. இதுபோன்ற பழமையான திரையரங்கு இடிக்கப்படுவது இளைய தலை முறைக்கு தெரியாவிட்டாலும், பழைய சினிமா ரசிகர்களுக்கு வருத்தம் அளித் துள்ளது.

இது குறித்து மதுரையைச் சேர்ந்த சினிமா ரசிகர்கள் கூறியதாவது:

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி மதுரை நகருக்கும், திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 1980-க்குப் பிறகு மதுரை, மதுரையைச் சுற்றி எடுத்த பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை புரிந்துள்ளன. மதுரையில் படமெடுத்தால் வெற்றி பெறும் என திரைத் துறையினர் இன்றும் நம்புகின்றனர்.

இன்றைக்கும் புதுப் படங்கள் ரிலீஸுக்கு வித்தியாசமான வரவேற்பை தருவது மதுரை ரசிகர்களே. இருந்தாலும், காலத்தால் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது குறைந்ததால் மதுரையில் சமீப காலமாக பழமையான திரை யரங்குகள் இடிக்கப்படுவதும், வர்த்தக நிறுவனமாக மாற்றப்படுவதும் காலத்தின் கட்டாயமாகியது.

சினிமா ரசிகர்களுக்கு இது கண்ணீரை தருகிறது. என்றாலும், திரையரங்கு உரிமையாளர்கள் இழப்பீடுகளை சந்திக்க முடியவில்லை.

தினமணி டாக்கீஸ், தெற்குமாசி வீதியிலுள்ள சிடி சினிமா ஜவுளிக் கடைகளாகவும், நடனா-நாட்டியா திரை யரங்கம் கார் நிறுத்தும் இடமாகவும் மாறியது. 1930-ம் ஆண்டு கட்டப்பட்ட சிடி சினிமா திரையங்கில் சிந்தாமணி என்ற திரைப்படம் 3 ஆண்டுகள் ஓடி வசூலில் சாதனை படைத்தது. இத் தொகையில் இருந்தே தற்போது இடிக்கப்படும் பழமையான சிந்தாமணி திரையரங்கு கட்டப்பட்டுள்ளது.

இத்திரையரங்கை மதுரையிலுள்ள பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கி குடோனாக பயன்படுத்தியது. தற்போது, அதை இடித்து தரைமட்டமாக்கி, கீழ் தளத்தில் இரு அடுக்கு உட்பட 6 அடுக்குகளாக மாற்றப்பட உள்ளது. இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதியை நாடியுள்ளது என்றனர்.

SCROLL FOR NEXT