சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீரின் அளவு வினாடிக்கு 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வோர் ஆண்டும் இரு கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடும் ஆந்திர அரசு, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீரை அணையில் இருந்து திறந்துவிடவில்லை.
இந்நிலையில் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் கோரிக்கையின்படி, சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை, கடந்த 10-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா கால்வாயில் திறந்து விட்டது ஆந்திர அரசு.
இதற்கிடையே கண்டலேறு அணையில் இருந்து, மிக மெதுவாக தமிழகம் நோக்கி வந்துக் கொண்டிருந்த கிருஷ்ணா நீர், கடந்த 18-ம் தேதி மாலை 5.30 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பத்தில் உள்ள ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது.
அந்த நீர், ஜீரோ பாயிண்டில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நேற்று முன் தினம் காலை 7.20 மணிக்கு வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு தொடக்கத்தில் வினாடிக்கு 35 கனஅடி என வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நதி நீர், நேற்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 85 கனஅடி அளவில் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கண்டலேறு அணையில் இருந்து 200 அடியாக திறந்துவிடப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று வினாடிக்கு 900 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டது.
அந்த கிருஷ்ணா நதி நீர், நேற்று மதியம் 3 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட்டுக்கு வினாடிக்கு 130 கனஅடி அளவில் வந்து கொண்டிருந்தது. அதே நேரம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 87 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு இருந்து. இதில், சென்னையின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 55 கனஅடி நீர் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டது.
கணிசமாக அதிகரிப்பு
தற்போது வறண்டுக்கிடக்கும் பூண்டி ஏரியின் பெரும்பகுதி, கிருஷ்ணா நதி நீரின் வருகையால் விரைவில் நீர் நிறைந்து காணப்படும். அதுமட்டுமல்லாமல், பூண்டி ஏரியின் நீர் இருப்பு கணிசமாக அதிகரித்து, சென்னையின் குடிநீர் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத சூழலை உருவாக்கும் என்கிறார்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.