தமிழகம்

ராமானுஜர் காட்டிய வழியில் இயற்கையை பாதுகாக்க வேண்டும்: தமிழக ஆளுநர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ராமானுஜர் காட்டிய வழியில் இயற்கையை போற்றிப் பாதுகாத்தால் நாம் வளமுடன் வாழலாம் என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.

வைணவ ஆச்சாரியரான ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழாவையொட்டி, ஸ்ரீமந் உபயவேதாந்த ஆச்சார்ய பீடம், ஸ்ரீவீரராகவ ராமானுஜ கூடம் சார்பில் 3 நாள் வைணவ சங்கோஷ்டி (மாநாடு) ஸ்ரீரங்கம் கீழச் சித்திரை வீதி ‘கோ-ரத’ மூலையில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேசியதாவது:

உலகில் உள்ள மதங்கள் அனைத்துமே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைதான் போதிக்கின்றன. ஒற்றுமை மட்டுமே உலக மக்களை வளமுடன் வாழ வைக்கும். எந்தச் சூழலிலும் தீவிரவாதம் மக்களின் நல்வாழ்க்கைக்கு உகந்தது இல்லை என்பதுதான் மதங்கள் வலியுறுத்தும் பாடம்.

நல்லிணக்கத்தைப் பேணுவதில் நம் நாட்டை எந்த நாடும் மிஞ்சமுடியவில்லை. இதற்கு நம் நாட்டில் இருந்த ஆச்சார்யர்கள், குருமார்கள் கற்றுத் தந்த போதனைகளே காரணம்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. சபையும், உலக நாடுகள் அனைத்தும் யோகாசனத்தை அங்கீகரித்தன. இது நம் நாட்டின் பாரம்பரியத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று பெருமை கொள்ள வேண்டும்.

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை வளங்களை நாம் முறையாக பாதுகாக்கவும், வளங்களை சேமிக்கவும் ராமானுஜர் வழிகாட்டியுள்ளார். அதை நாம் பின்பற்றாததால்தான் இன்று மாநிலங்களுக்கிடையே இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ராமானுஜரின் வழியை நாமும் பின்பற்றி வளமுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்றார்.

விழாவுக்கு திரிதண்டி சின்ன ஸ்ரீமந் நாராயண ராமானுஜ ஜீயர் தலைமை வகித்தார்.

விழாவில், ஸ்ரீரங்க நாராயண ஜீயர், ஆழ்வார்திருநகரி ஸ்ரீஎம்பெருமானார் ஜீயர், வானமாமலை ஸ்ரீராமானுஜ ஜீயர், அயோத்தி ராமானுஜ ஜீயர், திருக்குறுங்குடி ஸ்ரீராமானுஜ ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தாயார் சன்னதியில் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் திருவீதியுலா உத்தர, சித்திரை வீதிகள் வழியாக, விழாப்பந்தலை வந்தடைந்தது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு நேற்று காலை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், பெரிய பெருமாள், தாயார், கருடாழ்வார் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளில் வழிபட்டார்.

          
SCROLL FOR NEXT