சென்னை: முன்னாள் அமைச்சர் கக்கனின் மகனுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனி மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காமராஜர் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் கக்கன். எளிமையான மனிதர் என்று பெயர் பெற்றவர். இவரது 2-வது மகன் பாக்கியநாதன் (79). இதயம் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இவரிடம் முதல்வர் காப்பீடு திட்ட அட்டை இல்லாததால், சிலபரிசோதனைகளுக்கு ரூ.4 ஆயிரம் அளவுக்கு செலவு செய்ய வேண்டி இருந்தது. இதனால், மருத்துவ செலவுக்கு உதவுமாறு, முதல்வர் தனிப் பிரிவில் பாக்கியநாதனின் மனைவி சரோஜினி தேவி சமீபத்தில் மனு கொடுத்தார்.
முதல்வர் அலுவலக அறிவுறுத்தலின்படி, பாக்கியநாதனுக்கு தனி மருத்துவக் குழு அமைக்கப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.