கோவை திமுகவில் ஏற்பட்டுள்ள கடைசிநேர கூட்டணி மற்றும் கோஷ்டி குழப்பத்தால் ஒரு வார்டுக்கு 2 முதல் 4 பேர் வரை போட்டி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேநிலை, அதிமுகவிலும் நிலவி இருக்கிறது.
கோவை மாவட்ட அதிமுகவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அவர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபடி இருந்தன. ஒசூர் சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகம், ரத்தினபுரி அதிமுக கிளை அலுவலகம் என சுமார் 5 வார்டுகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் முற்றுகை, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். இதைத் தவிர, பல வார்டுகளில் வேட்பாளர்கள் மீது அதிருப்தியாளர்கள் புகார் மனுக்களாக தலைமைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள் சென்னையிலேயே இருந்ததால் இந்த பிரச்சினைகளுக்கு விடிவு கிடைக்கவில்லை.
எனவே ஒவ்வொரு வார்டுகளிலும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக சுயேச்சையாக பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒரு வார்டுக்கு 3 முதல் 7 பேர் வரை அதிமுகவினரே தன் மனைவி அல்லது உறவுக்காரர்கள் பெயர்களில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளதாகவும், பல இடங்களில் தங்களுக்கு எதிராக அந்த கட்சி நிர்வாகிகளே எதிராகப் பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர் கட்சியின் சீனியர்கள்.
திமுக கூட்டணியில், வேட்பாளரை மாற்று, கூட்டணிக் கட்சிக்கு கொடுத்ததை திரும்பப் பெறு போன்ற கோஷங்களுடன் பலர் மாவட்ட திமுக கட்சி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தது, அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டது போன்ற சம்பவங்கள் 2 நாட்களாக நடந்தன.
நேற்று இதன் உச்சகட்டமாக கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளிலும் திமுக கூட்டணியில் (திமுக, காங்கிரஸ்) யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள்; செய்கிறார்கள் என்பதில் மிகுந்த குழப்ப நிலையே நிலவியது.
இதுகுறித்து திமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் 17 வார்டுகள் காங்கிரஸுக்கும் 1 வார்டு மனிதநேய மக்கள் கட்சிக்கும், 82 வார்டுகள் திமுகவுக்கும் முதலில் முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் பல்வேறு அதிருப்திகள் நிலவின. சென்னையிலேயே காங்கிரஸுக்கு மிகக்குறைந்த வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இங்கே மட்டும் 17 வார்டுகள் தேவைதானா?’ என்று பிரச்சினைகள் கிளம்பியதில் தற்போது தலைமையில் 12 ‘சீட்’ மட்டுமே அவர்களுக்கு என்று முடிவு செய்து மற்ற இடங்களில் வேட்பாளர்களை மனுதாக்கல் செய்யக் கூறியுள்ளனர். அதுதவிர, கொமதேக கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதிருப்தியாளர்கள் நிறைந்துள்ள வார்டுகளிலும் சர்ச்சைக்குரிய நிர்வாகிகளை மனுதாக்கல் செய்யுங்கள், கட்சி அங்கீகாரக் கடிதம் பிறகு தரப்படும் என்று அறிவுறுத்தியுள்ளனர். எனவே இப்போது 25 பேருக்கு மேல் கட்சி அங்கீகாரக் கடிதம் தரும் என்ற நம்பிக்கையில் வேட்பாளர் பட்டியலில் பெயர் வராமலேயே மனு தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த குளறுபடிகள் எல்லாம் வேட்பு மனு வாபஸ் பெறும் வரை நீடிக்கும்’ என்றார்.
இது குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘எங்களுக்கு 17 ‘சீட்’ கொடுக்கப்பட்டது அப்படியேதான் உள்ளது. திமுகவில் சிலர் தேவையில்லாமல் பிரச்சினை செய்வதால் கிளப்பப்பட்ட புரளி இது. அதையெல்லாம் மீறி எங்கள் கட்சியிலேயே பல உள்குத்து வேலைகள் நடக்கின்றன. நேற்று வரை இவர்தான் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு, அவர் அந்த வார்டில் பிரச்சாரமும் செய்த நிலையில் அவர்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளன. தற்போதைய காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தரப்பில் பல்வேறு ஆட்களை பிடித்து பலர் அங்கீகாரக் கடிதங்கள் வாங்கி வந்துவிடுகிறார்கள்.
இங்குள்ள மாவட்டத் தலைவரும், நான் என்ன செய்யட்டும் என்கிறார். ஏற்கெனவே மாநகராட்சி கவுன்சிலர்களாக இருந்த 3 பேர் தவிர மீதி உள்ள சீட்டுகளை ப.சிதம்பரம், ஆர்.பிரபு கோஷ்டியினர் பங்கு போட்டுக்கொண்டனர். அதிலும், ப.சிதம்பரம் கோஷ்டியினர் கையே ஓங்கியிருக்கிறது. அவர்கள், திமுக மேயர் என்றால் காங்கிரஸுக்கு துணைமேயர் கிடைக்கும் என்பதை உத்தேசித்தே காய் நகர்த்துகிறார்கள். இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட கோஷ்டியினர் ஓரங் கட்டப்பட்டுவிட்டனர். இதில் நீண்டகால கட்சித் தொண்டர்கள் கடும் வெறுப்பில் பல வார்டுகளில் சுயேச்சையாக மனுதாக்கல் செய்து வருகின்றனர்’ என்றார்.