தமிழகம்

வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிடுக: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை தமிழக அரசு நிலைநிறுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டலத்தில் வசித்து வரும் சசிகுமார் வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த நிகழ்வு ஏற்கெனவே ஒரு முறை நடந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பு போட்டு கண்காணித்த நிலையில், மீண்டும் ஒரு முறை நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ளனர்.இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த வெடிகுண்டு வீச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் பாபு காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

ஏற்கெனவே தமிழகம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தினந்தோறும் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற பல பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது. நேற்று பரோடா வங்கியின் பணம் ஒரு கோடியே இருபது இலட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கவுன்சிலர்கள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி தமிழக மக்களை பெரும் பீதி அடைய செய்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தல் உரிய முறையில் நடக்குமா? என்ற பலத்த கேள்வி மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் நியாயமான தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்.

போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை இந்த அரசு நிலை நிறுத்த வேண்டும். சசிகுமார் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நபர்களை உடனடியாக கைது செய்து அப்பகுதி மக்களுக்கும், சசிகுமார் குடும்பத்துக்கும் நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.

தேர்தலில் நேரடியாக மோத பலம் இல்லாதவர்களுக்கு தேமுதிக சார்பாக கடும் எச்சரிக்கையை விடுக்கிறேன். தேர்தலை தைரியமாக எதிர்கொண்டு போட்டியிட வேண்டும், அதை விடுத்து இதுபோன்ற கோழைத்தனமான செயல்களில் யார் ஈடுபட்டாலும் தேமுதிக வினர் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT