நாகர்கோவில்: இந்திய ஒற்றுமை பயணத்தின் 3-ம் நாள் நடைபயணத்தை ராகுல் காந்தி நாகர்கோவிலில் இருந்து தொடங்கினார். வில்லுக்குறி பகுதியில் ராகுலை சந்தித்த தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி மூன்றாவது நாள் இந்திய ஒற்றுமை பயணத்தை இன்று (செப்.9) நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கல்லூரியில் இருந்து தொடங்கினார்.
3-வது நாள் இந்திய ஒற்றுமை பயணத்தில் நாகர்கோவிலில் இருந்து சுங்கான்கடை, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, தக்கலை, அழகியமண்டபம் வழியாக செல்லும் ராகுல், முலகுமூட்டில் இன்று தனது பயணத்தை நிறைவு செய்கிறார். இன்று பிற்பகல் அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவிருக்கிறார்.
இதனிடையே 3-ம் நாள் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, வழிநெடுகிலும், காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகுல் காந்தி வில்லுக்குறி பகுதியை அடைந்தபோது, அங்கிருந்த சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து டீ குடித்தார். அப்போது, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் குமரி மாவட்ட விவசாயிகள் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடினர். இந்த சந்திப்பின்போது கரூர் எம்.பி. ஜோதிமணி உடனிருந்தார்.