திருச்சி: தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்திஉள்ளார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நீட் தேர்வே கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருந்து, சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார். அதுவரை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஹைடெக் லேப் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
திருமுல்லைவாயலில் ஒரு மாணவி குறித்த தகவல் (நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டவர்) மிகுந்த கவலையில் ஆழ்த்திஉள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வரப்போகிறது என்பதை அறிந்தவுடன் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போலிருந்தது. மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து படிக்க வேண்டும்.
தேர்வு முடிவுகள் வரும்போது, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ளஉயர்கல்விக்கான வழிகாட்டுதல் மையத்தை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் 14417, 104 என்ற இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டுமனதளவில் உள்ள கஷ்டத்தை போக்கிக் கொள்ள வேண்டும்.
உயிரை மாய்த்துக் கொள்வதால் சாதிக்கப்போவது ஒன்றும் இல்லை. அன்பான பெற்றோரையும், சமூகத்தையும் அது கவலையில் தான் ஆழ்த்தும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.