தமிழகம்

காரைக்காலில் கொல்லப்பட்ட மாணவருக்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் குழுவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுவை மாநிலம் காரைக்காலில் 8-ம் வகுப்பு படித்து வந்த ராஜேந்திரன் என்பவரது மகன் பால மணிகண்டன் படிப்பிலும், போட்டிகளிலும் முதலிடம் பிடித்து வந்தார்.

இதனால் வெறுப்படைந்த சக மாணவியின் தாயார் சகாயராணி விஷம் கலந்த குளிர்பானத்தை பள்ளி காவலாளியிடம் கொடுத்து, பால மணிகண்டனின் வீட்டினர் மாணவரிடம் தரச் சொன்னதாக கூறியுள்ளார்.

இதை அருந்திய பால மணிகண்டன், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து சகாயராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பெற்றோர் குற்றம்சாட்டியிருந்தனர். இதுகுறித்து விசாரிக்க சுகாதாரத்துறை குழு அமைத்தது. குழந்தைகள் நல மருத்துவர் முரளி தலைமையில் டாக்டர்கள் ரமேஷ், பாலசந்தர் அடங்கிய 3 பேர் குழு காரைக்கால் சென்று ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அறிக்கை குறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ராமுலுவிடம் கேட்டதற்கு, “மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மருத்துவக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை சுகாதார செயலருக்கு அனுப்பி விட்டேன்.

எந்த வகையான விஷம்?

அறிக்கையில், சிகிச்சையளித்த காரைக்கால் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குறைச்சொல்லி எதுவும் இல்லை. குளிர்பானத்தில் எந்த வகையான விஷம் கலந்துள்ளது என தெரியவில்லை.

எந்த வகை விஷம் என தெரிந்தால்தான் சரியான சிகிச்சை தர முடியும். பிரேத பரிசோதனை வந்தபிறகே அதில் எந்த வகை விஷம் கலந்திருந்தது என்பது தெரியும். பிரேத பரிசோதனை அறிக்கை வர ஒருவாரம் ஆகும்" என்று குறிப்பிட்டார்.

எலிபேஸ்ட் விற்க தடை

அவரிடம், ‘எலிபேஸ்ட்டை பெட்டிக்கடைகளில் விற்பதற்கு தடை வருமா?’ என்று கேட்டதற்கு, “எலி பேஸ்ட் அனைத்து பெட்டிக்கடைகளிலும் கிடைக்கிறது. வேளாண்மைக்கான உரிமம் பெற்ற உரம், பூச்சி மருந்து கடைகளில்தான் இதை விற்க வேண்டும்.

விஷப்பொருட்களை எளிதில் வாங்குவதை கட்டுப்படுத்த சட்டத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT