காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் சேதமடைந்தன.
இவ்வாறு மழைநீர் புகுந்து குடியிருப்புகள் சேதமடைந்ததற்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பெரும் காரணமாக அமைந்தன. வெள்ளம் வந்தால் சமாளிப்பதற்கான முன்னேற்பாடு திட்டங்கள் மட்டுமே விறு, விறுப்பாக நடைபெற்று வருவதாகவும், வெள்ளம் வராமல் தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர்கூறும்போது, “குறிப்பாக வேகவதி ஆற்றில் 1,200-க்கும் மேற்பட்டவீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இவர்களுக்கு கீழ்கதிர்பூர் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கி அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
அந்த குடியிருப்புகளுக்கு வேகவதி ஆற்றில் வசிக்கும் மக்கள் இன்னும் குடியமர்த்தப்படவில்லை. அந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வீணாக கிடக்கின்றன. ஆறு, கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவே வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ள பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை இப்போது அவசியம்” என்றனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர்மா.ஆர்த்தியிடம் கேட்டபோது, “வேகவதி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களை கீழ்கதிர்பூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு மாற்றும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.
பயனாளிகள் பங்குத் தொகையாக ரூ.1.5 லட்சம் கட்ட வேண்டியுள்ளது. அதனை கட்டுவதற்கு குடிசை மாற்று வாரியம், பொதுமக்கள் மற்றும் வங்கிகள் மூலம் மும்முனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். அந்த மக்களிடம் பேசி அவர்களை கீழ்கதிர்பூர் குடியிருப்பு மாற்றும் நடவடிக்கை எடுத்த பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.