தமிழகம்

பிளாஸ்டிக்கில் பொருட்களை அடைத்து விற்கும் உற்பத்தியாளரே பிளாஸ்டிக்கை அழிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய முயற்சி

ச.கார்த்திகேயன்

சென்னை: பிளாஸ்டிக்கில் அடைத்து ஒரு பொருளை விற்கும் உற்பத்தியாளரே அந்த பிளாஸ்டிக்கை அழிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை செயல்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இறங்கியுள்ளது.

பிளாஸ்டிக்கை எரிப்பதால் வளிமண்டலம் பாதிப்புக்கு உள்ளாகிறது. விலங்குகள் பிளாஸ்டிக்கை உண்டு அழியும் நிலையும் இருந்து வருகின்றன.

இது மண்ணின் தன்மையையும் கெடுக்கிறது. பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு என்பதை உலகமே ஒப்புக் கொண்டாலும், அதன் பயன்பாட்டைதவிர்ப்பதில் மக்களிடமும், அரசுகளிடமும் ஒருவித தயக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இருப்பினும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை உலகின் பல நாடுகள் அறிவித்து வருகின்றன. ஆனால் பெரும்பாலான நாடுகளால் அந்த தடையை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.

தமிழக அரசும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, கடந்த 2019-ம்ஆண்டு ஜன.1 முதல் அமல்படுத்தி வருகிறது. இதை செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு பணிகள் இருப்பதால், இப்பணிகளை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை.

இதற்கிடையில் மத்திய அரசு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காதுமொட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடி, மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், குவளைகள் உள்ளிட்டவற்றுக்கு தடைவிதித்துள்ளது. இதை செயல்படுத்த எஸ்யுபி (SUP Grievance App) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனிடையே ஒரு பொருளை உற்பத்தி செய்து,அதை பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து விற்கும் நிறுவனங்களே, அந்த பிளாஸ்டிக்கை திரும்பப் பெற்று அழிக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதை செயல்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்ட பிறகு, விதிகளை மீறி தயாரித்த 174தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இது போன்ற தொழிற்சாலைகள் குறித்து தகவல் அளித்தால் வெகுமதி அளிக்கவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

மாநிலம் முழுவதும் இதுவரை 1,842 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.11 கோடிஅபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க கடந்த ஆண்டு டிசம்பரில் ‘மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

மேலும், ஒரு குறிப்பிட்ட பொருளை உற்பத்தி செய்து,அதை பிளாஸ்டிக் உறைகளில் அடைத்து விற்கும் உற்பத்தியாளர்களே, அந்த பிளாஸ்டிக்கை திரும்பப் பெற்று அழிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசின்அறிவுறுத்தல்படி செயல்படுத்த இருக்கிறோம்.

இதன்படி, நுகர்வோரிடமிருந்து பிளாஸ்டிக்கை பெற்று முறையாக அழிப்பதும், மறுசுழற்சிக்கு அனுப்புவதும் உற்பத்தி நிறுவனங்களின் பொறுப்பாகும். இந்த விதிகளின்கீழ் தமிழகத்தில் உள்ள22 உற்பத்தி நிறுவனங்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்துள்ளன.

மேலும் பல நிறுவனங்களை அதில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் பிளாஸ்டிக் சாலையோரங்களில் வீசுவது தடுக்கப்படும். இந்த நடைமுறையாக செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT