தமிழகம்

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நாளை மறுநாள் தொடங்குகிறது: நவம்பர் 5-ல் சூரசம்ஹாரம்

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் (அக். 31) தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நாளை மறுநாள் (அக். 31) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

நவம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

நவம்பர் 5-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

அன்று மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள் வார்கள்.

திருக்கல்யாணம்

நவம்பர் 6-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு நடைபெறும். மாலை 6.30 மணியளவில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.

விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், மருத்துவம், தடையில்லா மின்சாரம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் பணியில் 1,300 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

SCROLL FOR NEXT