தமிழகம்

அடிக்கடி பெய்யும் கனமழையால் ஏற்காடு மலைப்பாதையில் நிலச்சரிவு அபாயம்

எஸ்.விஜயகுமார்

சேலம்: ஏற்காட்டில், கனமழை பெய்வதும், இதன் காரணமாக மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்வதால், தொடர் கண்காணிப்பு, சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்று ஏற்காடு மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு இருக்கும்போது, அதில் 3 இடங்களில் ஏற்காடு இடம் பெற்றுவிடும் என்ற அளவுக்கு மழை அதிகம் பெய்யக்கூடிய இடமாக ஏற்காடு உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 1-ம் தேதி 65.2 மிமீ, 5-ம் தேதி 70.2 மிமீ உள்பட தினமும் மழைப்பொழிவு இருந்தது. அடிக்கடி பெய்யும் கனமழையால் ஏற்காடு மலைப்பாதைகளில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்படுவதும் தற்போது இயல்பாகி வருகிறது. எனவே, ஏற்காடு மலைப்பாதைகளில் தொடர் கண்காணிப்பு மற்றும் சாலை பாதுகாப்புக்கான மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும், என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மழை மானிகளை நிறுவ வேண்டும்

இது குறித்து ஏற்காடு பகுதி மக்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஏற்காடு உள்ளது. மலைப்பாதை வழியாக கார்கள், இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். இச்சூழலில் கனமழை பெய்யும் போதெல்லாம், ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுதல், நிலச்சரிவு போன்றவை அடிக்கடி நிகழ்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் ஏற்காடு மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் குப்பனூர் பாதைக்கு போக்குவரத்து மாற்றப்பட்டது. தற்போது இப்பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, குப்பனூர் சாலையிலும் கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை அடிவாரத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் ஓடை போல மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதுபோன்ற சூழலில் ஏற்காட்டில் மழைப்பொழிவை கணக்கிட முண்டகப்பாடி என்ற இடத்தில் மட்டுமே, வருவாய்த்துறை சார்பில் மழைமானி வைக்கப்பட்டுள்ளது.

மழை பெய்வதை கணக்கீடு செய்வதற்கு அதிக மழை பெய்யும் இடங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களில் தானியங்கி மழைமானிகளை நிறுவ வேண்டும்.

மழை நீர் வழிந்தோடுவதற்கு தடையில்லா பாதைகளை உருவாக்க வேண்டும். ஏற்காட்டில் அதிகரித்து வரும் நிலச்சரிவு அபாயம் குறித்து, ஆய்வு மேற்கொண்டு, அவற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

தினமும் பணியாளர்கள் ஆய்வு

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மழைக்காலம் என்பதால், அடிவாரம்- ஏற்காடு சாலை, ஏற்காடு- குப்பனூர் சாலை ஆகியவற்றில் தினமும் அதிகாலையிலேயே நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மண் சரிவு, பாறைகள் விழுந்து கிடப்பது போன்றவை இருந்தால், அவற்றை உடனடியாக அகற்றிவிடுகின்றனர்.

அடிவாரம்- ஏற்காடு சாலையில், ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குப்பனூர் சாலை, அடிவாரம்- ஏற்காடு சாலை ஆகியவற்றில் சீரமைப்புப் பணியை மேற்கொள்ள மொத்தம் ரூ.6 கோடியில் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். மலைச்சரிவில் வழிந்துவிழும் நீரை, சாலையின் ஓரமாக சிறு வடிகால் மூலமாக கொண்டு சென்று, மழை நீரை ஓடைகளுக்கு கொண்டு செல்லவும் தனியாக திட்டமிட்டுள்ளோம், என்றனர்.

SCROLL FOR NEXT