தமிழகம்

தி.நகர், புரசை, வண்ணையில் களைகட்டும் தீபாவளி விற்பனை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்; சிசிடிவி மூலம் தீவிர கண்காணிப்பு

செய்திப்பிரிவு

ஜவுளி, பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ளதால் சென் னையில் தி.நகர், புரசைவாக்கம் , வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட வற்றை வாங்க மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

தீபாவளி பண்டிகை வரும் 29-ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப் படுகிறது. தீபாவளிக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால், புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள், தங்க நகைகள், இனிப்புகள், பட்டாசுகள் விற்பனை களைகட்டியுள்ளது. மக்களைக் கவரும் வகையில் வணிக வளா கங்கள், முன்னனி நிறுவனங்கள் பல்வேறு தள்ளுபடி சலுகைகளை அறி வித்துள்ளன.

தீபாவளி விற்பனை சூடிபிடிக்க தொடங்கிவிட்டதால் தி.நகர், புர சைவாக்கம், பழைய வண்ணாரப் பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் தற்காலிக கடை களும் அதிகரித்துள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தி.நகரில் மக்கள் கூட்டம்

தி.நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் அணி வகுத்து நடந்து சென்றனர். ரங்க நாதன் தெரு, உஸ்மான் சாலை, வடக்கு உஸ்மான் சாலை, பாண்டி பஜார் சாலை இருபுறமும், துரைசாமி பாலம், நாகேஸ்வரா சாலை உள்ளிட்ட பல பகுதிக ளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.

பிரபல கடைகள் முதல் சாலையோரக் கடைகள் வரை அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நெரிசலை போக்குவரத்து போலீஸார் ஒழுங்குபடுத்தினர். திருடர்களைக் கண்காணிக்க 20-க்கும் மேற்பட்ட பெண் போலீஸார் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக சென்றனர் . அதிக நகை அணிந்து சென்ற பெண்களிடம், நகைகளை கவன மாகப் பார்த்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினர்.

பொதுமக் களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப் பட்டன. 2 கண்காணிப்பு கோபுரங்கள் மீது நின்றவாறு போலீஸார் தொலை நோக்கு கருவி மூலம் கண்காணித் தனர். மேலும், 225 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு தனிப் ப டை போலீஸார் கண்காணித்தனர்.

புரசைவாக்கத்தில் மக்கள் ஆர்வம்

எழும்பூர், கீழ்ப்பாக்கம், அயனாவரம், பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இருபுறமும் இருக்கும் கடைகளில் திரண்டிருந்தனர். மக்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் சாலையின் இருபுறமும் நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு இருந்தன. 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொருட்கள் வாங்க வந்திருந்த கீதா, ஷில்பா, ராஜீ ஆகியோர் கூறும்போது, ‘‘கடந்த சில ஆண்டு களாக நண்பர்களுடன் இங்கு வந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய ஆடைகள் வாங்குவது வழக்கம். இந்த ஆண்டும் புதிய ரக ஆடைகள் வாங்க ஆர்வமாக உள்ளோம். எங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆடைகளை வாங்கிச் செல்வோம்’’ என்றனர்.

50% விற்பனை அதிகரிக்கும்

சில வியாபாரிகளிடம் கேட்ட பே ாது, ‘‘வழக்கமான நாட்களை விட தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் வந்து ஆடைகள், பொருட்கள் வாங்குவார்கள். இதனால், 40 முதல் 50 சதவீதம் வரை விற்பனை அதிகரிக்கும்’’ என்றனர்.

வண்ணாரப்பேட்டை..

வடசென்னை மக்களின் முக்கிய வணிக மையம் வண்ணாரப் பேட் டை. இங்கு நேற்று கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தீபாவளிக்கு துணி எடுக்க வந்த செங்குன்றத்தை சேர்ந்த கலையரசி கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் தீபாவளிக்கு என் குடும்பத்தினர் அனைவருக்கும் இங்குதான் துணி எடுக்கிறோம். இங்கு குறைந்த விலையில், நம் விருப்பத்துக்கேற்ப பல்வேறு டிசைன்களில் துணிகள் கிடைக்கின்றன’’ என்றார்.

பெரம்பூரில் இருந்து வந்தி ருந்த ஜெகன் என்பவர், ‘‘நான் எப்போதும் பண்டிகைக்கு ரெடிமேட் ஆடைதான் வாங்கு வேன். இங்கு சாதாரண ரகம் முதல் பெரிய பிராண்ட் வரை குறைந்த விலையில் கிடைக்கின் றன’’ என்றார்.

புதிய ரகங்கள்

வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் ஜவுளி வியாபாரம் செய்யும் கணேஷ்ராம் என்பவர் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு புதிய ஜவுளி ரகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த ஆண்டும் பல்வேறு புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, இந்த தீபாவளிக்கு பெண்களைக் கவரும் விதமாக காப்பர் ஜரிகை புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டபுள் வார்ப்பு செய்யப்பட்ட ஐஸ்வர்யம் பட்டு, பண்டோரா பட்டு, மேகதூது, முந்தானையிலும் கொசுவத்திலும் ஒரேமாதிரியான டிசைன் கொண்ட பாட்லி பட்டு, சாகித்யம் ஸ்பன் சில்க், சிந்தடிக் கட் ஒர்க் மற்றும் ஃபேன்சி பேட்ச் ஒர்க் பொருத்தப்பட்ட கதானா புடவைகள், லெனின், மணிப்புரி, நேகமன், கலம்காரி, பட்டோலா, சர்ட்வால் போன்ற வகை சல்வாரிலும் புது டிசைன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் விலை ரூ.300 முதல் ரூ.3,000 வரை உள்ளது. ஆண்கள், சிறுவர், சிறுமியருக்கும் பல்வேறு புதிய டிசைன்களில் ரெடிமேட் ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வடசென்னை பகுதியில் நடுத்தர வர்க்கத்தினர், கூலித் தொழிலாளிகள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப குறைந்த விலையில் ஜவுளிகள் விற்கப்படுகின்றன’’ என்றார்.

SCROLL FOR NEXT