சென்னை: "விரைவில் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி தொடங்கும்" என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 72 நாட்களுக்குப் பின்னர், வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் நீதிமன்றம் சென்றுவிட்டதால், பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் பணி தடைபட்டது. விரைவில் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் பணி தொடங்கும்.
பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எங்களது தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் எங்களது தரப்பு ஆதாரங்களை சமர்ப்பித்து வாதிடுவோம்.
அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது. ஒருசிலர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், பொதுக்குழு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. இரண்டு அணியாக பிரிந்தால்தான் பிளவு, இது பிளவு கிடையாது. அதிமுகவுக்கு துரோகம் விளைவித்தவர்கள், இந்தக் கட்சிக்கு அவப்பெயர் விளைவித்தவர்கள், கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஓபிஎஸ் மன்னிப்புக் கேட்டால், எப்படி ஏற்றுக்கொள்வார்கள் தொண்டர்கள். கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒருவரே கொள்ளைக் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிற மாதிரி ரவுடிகளுடன் போலீஸ் பாதுகாப்புடன் வந்து அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கிய காட்சியை நாட்டு மக்களே பார்த்தனர். இப்படிப்பட்டவர்களை தொண்டர்கள் எப்படி மன்னிப்பார்கள்.
தொண்டர்களுக்கானதுதான் இந்த கட்சி தலைவருக்கு அல்ல. இணையும் போது அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓபிஎஸ்ஸுக்கு அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுத்தோம். ஆனால், அவர் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டிருக்கின்ற போது, அவர் திமுகவுக்கு உடந்தையாக பினாமியாக இருக்கின்றபோது, எங்கள் கட்சியை உடைக்கவும், அவதூறு பரப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்" என்று அவர் கூறினார்.