தமிழகம்

காட்டேரியில் இருந்து உதகைக்கு ரூ.40 கோடியில் மாற்றுப்பாதை: 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என அதிகாரி தகவல்

ஆர்.டி.சிவசங்கர்

சீசன் நேரங்களில் குன்னூர் நகருக்குள் செல்வதை தவிர்க்கும் வகையில், ரூ.40 கோடி செலவில் உதகைக்கு 4-வது மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

பொதுவாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் களை கட்டும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மேட்டுப்பாளையம் வந்து அதன் பின்னர் கோத்தகிரி சாலை அல்லது குன்னூர் சாலை வழியாக உதகை செல்வர்.

இதன் காரணமாக சீசன் நேரங்களில் அந்த 2 சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதேபோல பருவமழைக் காலங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வந்தனர்.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் உதகை வருவதற்கு ஏதுவாக ஹெத்தை- மஞ்சூர் வழியாக 3-வது மாற்றுப்பாதை உருவாக்கப்பட்டது. எனினும் இந்த சாலையில் இரவு நேரங்களில் செல்ல அனுமதி கிடையாது.

எனவே, மேட்டுப்பாளையத்தில் இருந்து காட்டேரி வந்த பின்னர் குன்னூர் நகருக்குள் செல்லாமல் காட்டேரியிலிருந்து சேலாஸ், கேத்தி பாலாடா, காந்திநகர், லவ்டேல் சந்திப்பு வழியாக உதகைக்கு வர 4-வது மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜூ கூறியதாவது: காட்டேரியில் இருந்து உதகை வரை உள்ள 20.5 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.40 கோடி செலவில் 4-வது மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன.

இதன்படி இங்கு 5.5 மீட்டர் அகலம் உள்ள சாலை தற்போது 7 மீட்டராக விரிவுபடுத்தப்படும். இதற்காக இந்த சாலைகளில் 136 இடங்களில் குழாய்கள் மற்றும் சிறிய பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த வழியாக உதகைக்கு செல்லும்போது 2.5 கிலோமீட்டர் தூரம் அதிகமாகும். ஆனாலும், சீசன் நேரங்களில் குன்னூர் நகருக்குள் செல்லாமல் இந்த சாலை வழியாக செல்ல முடியும் என்பதால் விரைவாகவும், எளிதாகவும் செல்லலாம்.

மேலும் இந்த வழியாக காட்டேரி அணை உட்பட பல்வேறு இயற்கை காட்சிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு விருந்தாக அமையும். இந்த பணிகளை 2 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT