உடுமலை நகராட்சி தினசரி சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
உடுமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். கடந்த 4 மாதங்களுக்கு முன் தக்காளி அறுவடை அதிகரித்தபோதும், கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. ஒரு கிலோ தக்காளி ரூ.6-க்கு கொள்முதல் செய்யப்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த சில வாரங்களாக தக்காளிக்கான தேவை அதிகரித்த நிலையில் கொள்முதல் விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து நகராட்சி தினசரி சந்தையில் தக்காளி விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறும்போது, ‘‘கடந்த சில நாட்களாக தக்காளி கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.
15 கிலோ கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ. 450-ஆக உள்ளது. ஒரு கிலோ ரூ.30-ஆகவும் உள்ளது. நாளொன்றுக்கு 30,000 பெட்டிகள் (450 டன்) சந்தைக்கு கொண்டு வரப்பட்டு கொள்முதல் செய்யப்படுகின்றன.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் கேரளாவுக்கும், தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்காக தக்காளி கொண்டு செல்லப்படுகிறது,’’ என்றனர்.