தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான வஹினி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரையொட்டியுள்ள ஆனேக்கல் தாலுகா பிதிரேகுப்பே கிராமத்தின்அருகே வஹினி ஆறு உருவாகிறது.
அங்கிருந்து அத்திப்பள்ளி வழியாக தமிழக எல்லையான ஜுஜுவாடியை அடுத்த எலசகிரி கிராமம் வழியாக ஓசூர் நகரப்பகுதியை அடைந்து, ஓசூர் சமத்துவபுரம் அருகேயுள்ள மோர்னப்பள்ளி கிராமம் வழியாக பயணித்து கூட்லு கிராமத்தின் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
ஒரு காலத்தில் இப்பகுதியில் உள்ள கோயில்களின் பூஜை உள்ளிட்ட பல்வேறு விசேஷங் களுக்கு வஹினி ஆற்றில் இருந்து புனித நீர் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் மழையின்றி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது.
மேலும், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆற்றில் கலந்து நீர் மாசடைந்தது.
ஓசூர் பகுதியில் வஹினி ஆற்றுடன் இணையும் ராம் நாயக்கன் ஏரியின் ராஜ கால்வாய் மற்றும் பல சிறிய நதிகளின் வழித்தடமும் காலப்போக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், வஹினி ஆறு தண்ணீர் இன்றி வறண்டது.
இந்நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதியில் நடப்பாண்டில் கோடையில் பெய்த கனமழையை தொடர்ந்து தற்போதைய தொடர் மழையால், 20 ஆண்டுகளுக்கு பின்னர் வஹினி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, ‘வஹினி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, நீர்வழிப்பாதையை தூர்வாரி சீரமைக்கவும், ஆற்றின் கரையோரங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.