சென்னை: சென்னையில் அனைத்து வகையான புழுதி மாசுப்பாட்டை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்றுசென்னை மாநகராட்சி ஆணையரிடம் பசுமைத் தாயகம் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
‘நீல வானுக்கான தூயக்காற்று பன்னாட்டு நாள்’ நேற்று (செப்.7) கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையில் காற்று மாசுவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி நேற்று முன்தினம் (செப். 6) அறிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநிலச் செயலாளர் இர.அருள், இணைச் செயலாளர்கள் ச.க.சங்கர், வி.ராதாகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் விநோபா பூபதி ஆகியோர் நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். கோரிக்கைகளை கவனமாகக் கேட்டுக்கொண்ட ஆணையர், சென்னை மாநகரின் புழுதி மாசுபாட்டைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.
அந்த மனுவில், “இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் கழிவு மேலாண்மை 2016 சட்டவிதிகள், சென்னை மாநகரில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் உள்ளிட்ட எதிலும் பின்பற்றப்படவில்லை.
சென்னை மாநகரில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளால் எழும் புழுதி மக்களின் உடல்நலத்தை பாதிப்பதாக இருப்பதாலும், அரசின் சட்டவிதிகளை மீறும் செயலாக இருப்பதாலும், சென்னை மாநகரின் அனைத்து வகை புழுதி மாசுபாட்டையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்திய அரசின் கட்டுமானம் மற்றும் கட்டிடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 சென்னைப் பெருநகரில் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.