தமிழகம்

வேளாண் விளை பொருட்களுக்கு செஸ் வரி விதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: வேளாண் விளை பொருட்களுக்கு செஸ் வரி விதிப்பதை ரத்து செய்யவேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேளாண் துறை சார்பில் கடந்த ஏப்ரல் 23-ல் விளை பொருட்கள் மீது செஸ் வரி விதிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. விவசாய நிலத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்லும் பொருட்களுக்கு மட்டும்தான் செஸ்வரி விதிக்க வேண்டும். ஆனால்,வாகனத்தில் கொண்டு செல்லும்போதே, அவற்றை மடக்கி, செஸ்வரி செலுத்தப்பட்டுள்ளதா என்றுஅதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

விசாரணை என்ற பெயரில் பலமணி நேரம் வாகனங்களை நிறுத்திவைப்பதால், விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மேலும், சரக்கு வாகன வாடகையும் அதிகரிக்கிறது. ஏற்கெனவே உறுதி அளித்த விலைக்கு, விவசாயிகளால் பொருட்களைக் கொடுக்க முடியவில்லை.

தமிழகத்தின் அத்தியாவசியத் தேவைக்கான உணவுப் பொருட்களின் விளைச்சல் 90 சதவீதம் தமிழகத்துக்கு வெளியே நடைபெறுகிறது. அங்கிருந்து வாங்கி வந்துதான், பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். இந்த பொருட்களுக்கும் செஸ் வரிவிதிக்கப்படுகிறது. இதனால் வணிகர்கள் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்க வேண்டியுள்ளது. இது ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும்.

சில பொருட்களை சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்தால் செஸ் வரி கிடையாது. தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்தால் செஸ் வரி விதிக்கப்படுகிறது. இதில் முறையான விதிகள் வரையறுக்கப்படவில்லை.

எனவே, தமிழக அரசு வேளாண் பொருட்களுக்கு விதித்துள்ள செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், வேளாண் துறைச் செயலர் சி.சமயமூர்த்தி ஆகியோரிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT