காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக கர்நாடக மாநிலம் தனது பிரதிநிதியை நியமிக்காதது கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாறு, பசுமை வழிச்சாலை ஆகிய இடங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணிகளில் அவர் ஈடுபட்டார். அப்போது நிருபர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
இந்தியாவை சுத்தமான நாடாக்க வேண்டும் என்பதற்காக தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு தொடங்கினார்.
தற்போது தூய்மை இந்தியா திட்டம் ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்படுகிறது. இந் நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா பூரண நலம்பெற வாழ்த்துகிறேன். சிகிச்சையில் இருப்பவரின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள் ளார். புகைப்படத்தை வெளியிடுவ தற்கான அவசியம் ஏதுமில்லை.
தமிழகத்துக்கு காவிரியி லிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகம் செயல்படுத்தாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா உண்ணாவிரதம் இருந்தது அவர் வகித்த பொறுப்புக்கு ஏற்ற செயலல்ல. காவிரி மேலாண்மை வாரியத்தை 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழகம் தரப்பில் உறுப்பினர் நியமனத்துக்காக பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், கர்நாடகம் உறுப்பினரை பரிந்துரைக்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.