திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள அண்ணனூர் அந்தோணி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுகுமார்(46). இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், தினேஷ்குமார் (24), அஸ்வின் (14) என்ற மகன்களும் உள்ளனர். சுகுமார், ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் சீனிவாசா நகர் விரிவுப் பகுதியில் டி-ஷர்ட், பனியன், கொடிகள் உள்ளிட்ட துணி வகைகளில் எழுத்துகள் மற்றும் ஓவியம் உள்ளிட்டவற்றை அச்சிடும் அச்சகம் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் அச்சகத்தில் பணிபுரிந்த சுகுமார், ஊழியர்கள் சென்ற பிறகு, உட்புறமாக பூட்டிக் கொண்டு அச்சகத்திலேயே தங்கினார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அச்சகம் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அச்சகத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது, அறை ஒன்றில், இரும்பு கம்பியால் தலையில் அடித்துக் கொல்லப்பட்ட நிலை யில் சுகுமார் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்த அம்பத்தூர் போலீ ஸார், உடலைக் கைப்பற்றி சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் மது பாட்டில்கள் இருந்ததால், சுகுமாருடன் சேர்ந்து மது அருந்திய மர்ம நபருக்கு கொலையில் தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.