காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத்த மத்திய அரசு மறுப்பது, கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும் செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்சினையில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்திட, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் (04.09.2016) முடிவடைகிறது. இப்பிரச்சினையில், ஏற்கனவே காவிரி நடுவர்மன்றம் கொடுத்த தீர்ப்பைத்தான் உச்ச நீதிமன்றம் அமலாக்கச் சொல்லியுள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்காகவும், பின் அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்யவும் என நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடந்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு நீதிமன்றத் தீர்ப்புகளை தொடர்ந்து உதாசீனப்படுத்திவருகிறது.
மத்திய அரசும் நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்குவதில் உறுதிகாட்டவில்லை. இதுவரை, தமிழக பாஜக தலைவர்கள், மேலாண்மை வாரியம் ஏற்படுத்த நீதிமன்றத் தடை இருப்பதாக தவறான முறையில் பிரச்சாரம் செய்துவந்தனர். உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை தெளிவாக்கியதுடன், மேலாண்மை வாரியம் ஏற்படுத்துவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்தது.
தமிழகம், புதுச்சேரி தனது தரப்பு நிபுணர்களை பரிந்துரைத்துள்ளன. நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க மாட்டோம் என்று தொடர்ந்து பேசிவரும் கர்நாடகம், தனது தரப்பு நிபுணரையும் பரிந்துரைக்கவில்லை.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து மத்திய அரசு நீதிமன்றத்தில் வாதிடுகிறது. அதற்காக சொல்லப்பட்டிருக்கும் காரணம் ஏற்புடையதல்ல. நடுவர் மன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்பைத்தான், உச்ச நீதிமன்றம் அமலாக்க வலியுறுத்தியதென்ற நிலையில், இப்பிரச்சினையில் இனியும் தாமதிப்பதானது கூட்டாட்சி முறை மீதே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் செயலாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக, அரசு அரசியல் கடந்து செயல்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.