தமிழகம்

தேசிய நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கி.வீரமணி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்பில் சேருவதற் கான தேசிய நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு (நீட்) திணிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. நுழைவுத் தேர்வு எதிர்ப்பில் தமிழகம் உறுதியாக இருந்ததால் இந்த ஆண்டுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

அதன்படி 2017-ல் நுழைவுத் தேர்வு என்பது தமிழகத்தையும் கட்டுப்படுத்தும். கடந்த 2007-ல் இருந்து தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படை யிலேயே மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் எஸ்.சி., எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பயன்பெற்றனர்.

இந்தியாவிலேயே 69 சதவீத இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக நிலைபெற்றிருப்பது தமிழகத்தில் மட்டும்தான். அதற்கான முயற்சியை திராவிடர் கழகம் மேற் கொண்டபோது அதற்கு உறுதுணையாக இருந்து நிலை நிறுத்தியது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு.

எனவே, தற்போதும் நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT